Published : 01 Oct 2019 10:44 AM
Last Updated : 01 Oct 2019 10:44 AM

நெகிழ வைத்த அருண் ஜேட்லி குடும்பத்தினர்: ஓய்வூதியம் வேண்டாம் என மாநிலங்களவைத் தலைவருக்கு கடிதம்

புதுடெல்லி

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் குடும்பத்தினர் ஓய்வூதியத்தைத் தங்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக மாநிலங்களவையில் குறைவாக ஊதியம் பெறும் 4-ம் நிலை பணியாளர்களுக்கு வழங்குங்கள் என குடியரசு துணைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வரை நிலுவையில் இருக்கும் அனைத்து தொகையையும் மாநிலங்களவையில் 4-ம் நிலை பணியாளர்களுக்குப் பிரித்துக் கொடுங்கள் என்று அருண் ஜேட்லியின் மனைவி சங்கீதா ஜேட்லி கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஜேட்லி, கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் எம்ய்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏழைகளுக்கும், தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அதிகமாக உதவும் எண்ணம் கொண்டவர். தனது துறையில் பணியாற்றும் குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அவரே செலுத்திவிடுவார். மேலும் பண்டிகை, விழாக் காலங்களில் அவர்களுக்குப் புத்தாடை, இனிப்புகள், பரிசுகள் வழங்கி மகிழ்ச்சிப்படுத்துவார்.

பாஜக தலைமையில் 2-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைந்தபோது, தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி அமைச்சர் பதவியை அருண் ஜேட்லி தவிர்த்தார். பிரதமர் மோடி வந்து சமாதானம் செய்தபோதிலும் தனது உடல்நலத்தால் ஏற்க முடியாத சூழலில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்தச் சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் கிருஷ்ணா மேனன் மார்க் என்ற அரசுக் குடியிருப்பில் இருந்து காலி செய்து, தெற்கு டெல்லியில் உள்ள தனது சொந்த இல்லத்துக்கு ஜேட்லி குடிபெயர்ந்தார்.

மத்திய அமைச்சராக ஜேட்லி இருந்தபோதிலும் கூட மிகப்பெரிய அரசு குடியிருப்பில் வாழ அருண் ஜேட்லி விரும்பாமல், சாதாரண வீட்டிலேயேதான் குடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பாஜகவில் மனிதநேயம் மிக்க தலைவராகவும், அதிகமான உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் அருண் ஜேட்லியை பெருமையாக மூத்த தலைவர்கள் கூறுவார்கள்.

மறைந்த அருண் ஜேட்லி மாநிலங்களவை எம்.பி.யாக இருந்ததால், அவர் மறைவுக்குப் பின் அவரின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியமாக மாதம் ரூ.20 ஆயிரம், கூடுதல் ஓய்வூதியமாக ரூ.1500 என வழங்கப்படும். இதுதவிர கடந்த 1999-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்ததால், கூடுதல் ஓய்வூதியமாக ரூ.22,500 என மாதம் ரூ.50 ஆயிரமும், ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.3 லட்சம் வரை கிடைக்கும்.

இந்நிலையில், அருண் ஜேட்லிக்கு கிடைக்கும் மாத ஓய்வூதியத் தொகையை மாநிலங்களவையில் 4-ம் நிலையில் பணியாற்றும் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வழங்குங்கள் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு அருண் ஜேட்லி குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x