மகாராஷ்டிர முதல்வர் தேர்தலில் வென்றதற்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு 

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் : கோப்புப்படம்
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் : கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, தன் மீதான 2 வழக்குகளை வேட்புமனுவில் குறிப்பிடாமல் இருந்ததால் அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவின் மீதான தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்குகிறது.

இந்த வழக்கில் இரு தரப்பு விசாரணை கடந்த ஜூலை மாதம் முடிந்த நிலையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு தீ்ர்ப்பை ஒத்திவைத்தது.

கடந்த 2014-ம் ஆண்டு மகராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில் பாஜக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட தேவேந்திர பட்நாவிஸ் தனது பிரமாணப் பத்திரத்திலும், வேட்புமனுவிலும் தன் மீதுள்ள இரு கிரிமினல் வழக்குகளைக் குறிப்பிடாமல் இருந்தார். இது தொடர்பாக சதீஸ் உகே என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறி, கடந்த 1996 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் இரு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்ததை தேவேந்திர பட்நாவிஸ் மறைத்துவிட்டார். ஆதலால், அவர் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரினார்.

ஆனால், இந்த வழக்கில் அப்போது உள்ளூர் நீதிமன்றம் இந்தப் புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதே தவிர குற்றச்சாட்டு ஏதும் பட்நாவிஸ் மீது பதிவு செய்யப்படவில்லை.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் பட்நாவிஸ் மீது வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வேட்புமனுவில் தன்மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளை வேட்பாளர் குறிப்பிடத் தேவையில்லை, குற்றச்சாட்டு பதிவு செய்த வழக்குகள் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது எனத் தெரிவித்து தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சதீஸ் உகே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து பட்நாவிஸ் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரினார். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை மாதம் முடிந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in