

புதுடெல்லி
எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் யாரையும் உடனடியாக கைது செய்யக்கூடாது என்று 2018-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா, பி.ஆர் காவே ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளனர்.
எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றம் சாட்டப்படும் நபர்களை முதல் கட்ட விசாரணை எதுவுமின்றி உடனடியாக கைது செய்வதற்குத் தடை விதித்தும், குற்றம் சாட்டப்பட்டோர் முன்ஜாமீன் பெறுவதற்குரிய அம்சங்களை அறிமுகப்படுத்தியும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி தீர்ப்பளித்தது.
எஸ்சி, எஸ்டி சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கியதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. எனினும், இந்தத் தீர்ப்பானது, எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கடுமையான பிரிவுகளை நீர்த்துப்போகச் செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரத்தை முன்வைத்து, எஸ்சி, எஸ்டி அமைப்புகள் பழங்குடி அமைப்புகள் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. எனினும், தங்களது தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரிவான பதிலைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், மற்ற மனுதாரர்களுக்கும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் எஸ்சி, எஸ்டி சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்வதற்கு வழிவகுக்கும் புதிய மசோதாவை, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதைக் கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் ஆகஸ்ட் 9-ம் தேதி நிறைவேற்றியது.
ஆனால், மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 13-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, யு.யு. லலித் ஆகியோர் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தீர்ப்பளித்தனர்.
அதன்பின் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா, பி.ஆர் காவே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த மாதம் 18-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
விசாரணையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை கடுமையாக 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விமர்சித்தது. அரசியலமைப்புக்கு விரோதமாக இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் கணக்கில் கொள்வதாகத் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது, நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து சமூகத்தில் எஸ்சி,எஸ்டி மக்கள் இன்னும் தீண்டாமைக்கும், பாகுபாட்டுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்று மத்திய அரசைக் கண்டித்தனர். அதுமட்டுமல்லாமல், மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்யும் பணி நடப்பதையும் நீதிபதிகள் கடுமையாகக் கண்டித்து, விஷவாயுக் குழிக்குள் மனிதர்களை அனுப்பி சாகடிக்கும் நிலை இங்குதான் இருக்கிறது என்று வேதனை தெரிவித்தனர்.
இந்தச் செயல்கள் அரசியலமைப்புக்கு விரோதமாக இருக்கிறது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் இன்னும் எஸ்சி,எஸ்டி மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு எந்தவிதமான உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கண்டித்தனர்.
இந்த சூழலில் இந்தச் சீராய்வு மனு வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளிக்க இருக்கின்றனர்.
ஐஏஎன்எஸ்