

பனாஜி
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேரை தனது கட்சிக்குள் இழுக்க பாஜக கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
தெற்கு கோவாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட கருத்துகளை அடுத்து க்ரிஷ் இவ்வாறு கூறியுள்ளார்.
பாஜகவில் சேர்ந்து அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட புதியவர்களின் பதவி தற்காலிகமானது என்றும், ஏமாற்றமடைந்த கட்சி நிர்வாகிகளுக்கு விரைவில் அவர்களுக்கான உரிமை கிடைக்கும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார்.
இதுகுறித்து கிரிஷ் சோடங்கர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 10 எம்எல்ஏக்களுக்கும் இது முடிவின் தொடக்கமாகும். உண்மையில், பாஜகவில் சேர்ந்தால் பதவி கிடைக்கும் என்று சென்றுள்ளனர். ஆனால் பாஜக மக்களைப் பயன்படுத்திக் கொண்டு பின்னர் வீசி எறிந்துவிடும்.
சுப்பிரமணியன் சுவாமி தனது கருத்துகளில் பாஜகவின் உள் எண்ணங்களைத்தான் வெளிப்படுத்தியுள்ளார். பாஜக அவர்களை (தவறிழைத்தவர்களை) அழித்துவிடும். சிலருக்குப் பணம் வழங்கப்பட்டுள்ளது, சிலருக்கு நிறுவனங்கள், அமைச்சகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழுக்க பாஜக ரூ.300 கோடி செலவிட்டுள்ளது.
எங்களை விட்டு வெளியேறிய 10 பேரைப் பொறுத்தவரை, இது முடிவின் ஆரம்பம். அவர்கள் அதை உணர்ந்து கொள்வார்கள்''.
இவ்வாறு சோடங்கர் தெரிவிததார்.
40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா மாநில சட்டப்பேரவையில் 2017-ல் 17 உறுப்பினர்களைக் கொண்டு மிகப்பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ், இப்போது வெறும் ஐந்து எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது.
ஜூலை மாதம் அப்போதைய எதிர்க் கட்சித் தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் தன்னுடன் 10 எம்எல்ஏக்களோடு பாஜகவில் சேர்ந்தார். ஏற்கெனவே மூன்று எம்எல்ஏக்கள் 2017 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் ஆளும் கட்சியில் சேர காங்கிரஸிலிருந்து விலகியுள்ளனர்.