பிஹார் துணை முதல்வர் வீட்டுக்குள் வெள்ளம்: படகு மூலம் மீட்ட பேரிடர் மீட்பு குழு

பிஹார் துணை முதல்வர் வீட்டுக்குள் வெள்ளம்: படகு மூலம் மீட்ட பேரிடர் மீட்பு குழு
Updated on
1 min read

பாட்னா
பிஹார் மாநிலம் பாட்னாவில் பெய்து வரும் பலத்த மழையால் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் வீட்டுக்குள்ளும் வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீரில் தவித்த அவரை பேரிடர் மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டனர்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மகாராஷ்டிர, பிஹார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால், கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான அணைகளும் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. . மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பலத்த மழையால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை, வெள்ளத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நள்ளிரவில் மேகவெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டித் தீர்த்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் நள்ளிரவில் ஒரே நேரத்தில் 15 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

இதேபோல் பிஹார், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. பிஹார் தலைநகர் பாட்னாவில் தொடர்ந்து 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

மாநிலத்தின் பல பகுதிகளிலும் விடாமல் மழை பெய்து வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலன இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்நதுள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வீடுகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் வீட்டுக்குள்ளும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தார். உடனடியாக அவரையும், அவரது குடும்பத்தினரையும் பேரிடர் மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டனர்.

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட அவர் உடனடியாக மீட்பு பணிகளையும் தொடங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in