பில்கிஸ் பானு வழக்கு: குஜராத் அரசுக்கு 2 வாரம் கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த வன்முறையின் போது கூட்டுப் பலாத்காரத்துக்கு ஆளாகிய பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, அரசுப் பணி, குடியிருப்பு ஆகியவற்றை 2 வாரங்களில் வழங்க வேண்டும் என குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானுவையும், அவரின் குடும்பத்தினரையும் ஒரு கும்பல் தாக்கியது.

அந்தத் தாக்குதல் நடந்த நேரத்தில் 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை அந்தக் கும்பல் தாக்கி, கூட்டுப் பலாத்காரம் செய்தது. அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை இரக்கமின்றிக் கொலை செய்து தப்பி ஓடியது. அதுமட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் வைத்திருந்த இரண்டரை வயதுக் குழந்தையை பாறையில் மோதி அடித்துக் கொலை செய்து மனிதநேயமற்ற அக்கும்பல் தப்பி ஓடியது.

இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 11 பேரைக் கைது செய்தனர். கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், ஒரு போலீஸார், மருத்துவர் உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

அந்த 7 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2017-ம் ம் ஆண்டு மே 4-ம் தேதி அளித்த தீர்ப்பில் இரு மருத்துவர்கள், 5 போலீஸாரையும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி பில்கிஸ் பானு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அவருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம், பணி, அரசுக் குடியிருப்பு வழங்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால், கடந்த 5 மாதங்களாக குஜராத் அரசு பில்கிஸ் பானுவுக்கு எந்தவிதமான இழப்பீடும் வழங்கவில்லை. மேலும் நிவாரணத் தொகை குறித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி குஜராத் அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எஸ்.ஏ.போப்டே, எஸ்ஏ. நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. குஜராத் அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி இருந்தார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு, "இந்த வழக்கில் பில்கிஸ் பானுவுக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம், வீடு, வேலை ஆகிய வழங்க கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஏன் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவில்லை" எனக் கேள்வி எழுப்பியது.

இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், " இதுபோன்ற பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் ஏற்கெனவே மாநில அரசிடம் இருக்கிறது. அதனால்தான் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்தோம்" எனத் தெரிவித்தார்.

அதற்கு தலைமை நீதிபதிகள், போப்டே, நசீர் ஆகியோர், " இந்த வழக்கில் உள்ள உண்மைத்தன்மை, ஆதாரங்கள் அடிப்படையில்தான் மிகப்பெரிய இழப்பீட்டை அறிவித்தோம்" எனத் தெரிவித்தனர்.

தீர்ப்பு

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், " அந்தச் சம்பவத்தில் பில்கிஸ் பானு தனது குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளார். தனது வயிற்றில் இருந்த சிசுவைப் பறிகொடுத்துள்ளார். பலரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவரின் இரண்டரை வயதுக் குழந்தையை பாறையில் மோதி கொலை செய்துள்ளார்கள். அதன்பின் தனியார்தொண்டு நிறுவனத்தில் நாடோடி போல் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்துள்ளார்.

இன்றைய சூழலில் உலகில் பணம்தான் பாதிக்கப்பட்டவருக்கு மிகப்பெரிய ஆறுதல். ஆனால், இந்தப் பணத்தால் அவர் பட்ட வேதனைகள், காயங்கள் ஆறிவிடுமா எனத் தெரியாது. பாதிக்கப்பட்டவருக்கு இதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும். இந்த சூழலில் பாதிக்கப்பட்டவர் என்னவிதமான இழப்பீடு கேட்கிறாரோ அதை உத்தரவாகப் பிறப்பிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆதலால், பில்கிஸ் பானுவுக்கு அடுத்த 2 வாரங்களில் ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும், குடியிருப்பும் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

, பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in