

புதுடெல்லி
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவைக் கண்டுபிடிக்கக் கோரி மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 15-ம் தேதி நடக்க இருந்த விழாவுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை மதிமுக பொதுச்செயலாளர் அழைத்திருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பரூக் அப்துல்லா வரவில்லை. இதையடுத்து, வைகோ சார்பில் அவரின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் அட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்
அதில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருக்கலாம். அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை ஆதலால், அவரை ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
கடந்த 16-ம்தேதி இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு, பரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரியும், மத்திய அரசு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது.
இந்த சூழலில் காஷ்மீர் மாநிலத்தின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டுள்ளார் என்று காஷ்மீர் மாநில நிர்வாகம் அறிவித்தது.
இந்தச் சூழலில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எஸ்.ஏ.நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரிக்கும் முன், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், வைகோவின் வழக்கறிஞரிடம், " காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. ஆதலால், இந்த மனுவை இனிமேல் விசாரிக்க முடியாது. அதற்கான முகாந்திரமும் இல்லை. தேவைப்பட்டால் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து அதுதொடர்பான மாநிலத்தில் முறையிடலாம். உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது'' என மறுத்துவிட்டார்.