Published : 30 Sep 2019 12:21 PM
Last Updated : 30 Sep 2019 12:21 PM

ஐஏஎஸ் அதிகாரியை உயிருடன் புதைத்து விடுவதாக பாஜக எம்.பி. சர்ச்சைப் பேச்சு

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரேவாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் அத் தொகுதியின் பாஜக எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா. | படம்: ஏஎன்ஐ.

ரேவா (ம.பி.)

மத்தியப் பிரதேசத்தின் பாஜக எம்.பி. ஒருவர், மாநகராட்சி ஆணையராகப் பணிபுரியும் அரசு ஐஏஎஸ் அதிகாரியை அடக்கம் செய்துவிடுவதாக பொதுக்கூட்டத்தில் அச்சுறுத்திப் பேசியுள்ளார்.

ரேவா மக்களவைத் தொகுதி எம்.பி ஜனார்த்தன் மிஸ்ரா, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ரேவாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, ''மாநகராட்சி ஆணையர் சஜ்ஜித் யாதவ், சட்டவிரோத காலனிகளில் வசிக்கும் மக்களிடமிருந்து லஞ்சம் வாங்குவதாக எனக்குத் தகவல் வந்துள்ளது. மாநகராட்சி ஆணையர் உங்களிடம் வந்து பணம் கேட்கும்போது என்னை அழைக்கவும்.

நான் வந்து ஒரு குழிதோண்டி அவரை உயிரோடு புதைப்பேன். ஒருவேளை, என்னால் சரியான நேரத்திற்கு அங்கு வரமுடியாவிட்டால், நீங்கள் (மக்கள்) அனைவரும் அதைச் செய்ய வேண்டும். நீங்கள் அனைவரும் அரசு ஊழியர்களைக் கண்காணித்துச் செயல்படுவதில் கூர்மையான மண்வெட்டி, கோடரியாக இருக்க வேண்டும்,

நான் வருவதற்கு முன்பு வேறு யாராவது ஆணையரை உயிருடன் அடக்கம் செய்தாலும், அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அங்கே என் பெயர் தாங்கிய பலகையை நிறுவுவேன். ஏனெனில் ரேவா ஆணையரை உயிருடன் புதைத்த எம்.பி. என்று நாடு என்னை அங்கீகரிக்கும்'' என்று ஜனார்த்தன் மிஸ்ரா பேசினார்.

அரசு உயர் அதிகாரிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக பாஜக எம்.பி.பேசியுள்ளது மத்தியப் பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x