சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்குக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் குறைப்பு

பிரேம் சிங் தமாங்
பிரேம் சிங் தமாங்
Updated on
1 min read

புதுடெல்லி

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்குக்கு விதிக்கப்பட்ட தடைக்காலத்தில் 5 ஆண்டுகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக குறைத்துள்ளது.

இதனால், அவர் தற்போது எவ்வித தடையும் இன்றி தேர்தலில் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.

சிக்கிம் முதல்வரான பிரேம் சிங் தமாங், கடந்த 1990களில் கால்நடைத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அன்றைய காலக்கட்டத்தில், பசுக்கள் விநியோகத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் அவர் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அவர் மீது 2003-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம், பிரேம் சிங் தமாங்குக்கு 2017-ம் ஆண்டு ஓராண்டு சிறைத் தண் டனை விதித்து உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை அவர் சிறைத் தண்டனை அனுபவித்தார்.

இதையடுத்து, கிரிமினல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றதன் காரணமாக, அவருக்கு தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. அதாவது, 2024-ம் ஆண்டு வரை பிரேம் சிங் தமாங் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அமோக வெற்றி பெற்றது.

அதன் பின்னர், அவரது கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், பிரேம் சிங் தமாங் முதல்வராக பதவியேற்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், முதல்வராக பதவி யேற்ற 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் பிரேம் சிங்குக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக, தனக்கு விதிக்கப்பட்ட தடைக்காலத்தை (தேர்தலில் போட்டியிடுவதற்கான) குறைக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 11-வது பிரிவின் கீழ், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்காலத்தை 13 மாதங்களாக தேர்தல் ஆணையம் நேற்று குறைத்தது. அவ்வாறு பார்த்தால், அவரது தடைக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.

எனவே, முதல்வர் பிரேம் சிங் தமாங், சிக்கிம் மாநிலத்தின் ஏதேனும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் விரைவில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in