Published : 30 Sep 2019 07:29 AM
Last Updated : 30 Sep 2019 07:29 AM

முதலாளித்துவத்தின் எதிர்காலம்

குர்சரண் தாஸ்

கடந்த 2007-08-ம் ஆண்டில் சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு முத லாளித்துவம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில் உள்ள இளைஞர்கள் முதலாளித்துவ சந்தைக்கு எதிராக திரும்பி வருகின்றனர். இது சமூக ஏற்றத்தாழ்வை அதிகரித்து வருவதாகவும் தலைமை அதிகாரிகளின் கொழுத்த சம்பளம் வெறுப்பை அளிப்ப தாகவும் செய்யும் தொழிலில் நம்பகத் தன்மை குறைந்து வருவதாகவும் கூறியுள்ள னர். ஹார்வர்டு பல்கலைக்கழகம் கடந்த 2016-ம் ஆண்டில் நடத்திய ஒரு ஆய்வில், அமெரிக்காவின் 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் முதலாளித்துவத்தை நிராகரித்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் கழித்து, 2018-ல் கேலப் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், இந்த வயதினரில் 45 சதவீதம் பேர் மட்டுமே முதலாளித்துவ முறைக்கு சாதகமாகக் கருத்துத் தெரிவித் துள்ளனர். அமெரிக்காவில் ட்ரம்ப் அதிபரான தும் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வாக்குகள் கிடைத்திருப்பதும் இந்தப் போக்கைத்தான் காட்டுகிறது.

முதலாளித்துவம் தோல்வி அடைந்து விடுமோ என்ற பயம் காரணமாக அமெரிக்கா வின் மிகப் பெரிய நிறுவனங்களின் 180 தலைமைச் செயல் அதிகாரிகள் சமீபத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டனர். நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் மில்ட்டன் ஃபிரைடுமேன் கடந்த 1970-ம் ஆண்டில் கூறிய, ‘‘நிறுவனத்துக்கு லாபமும் பங்குதாரர்களின் நலனும் தான் முக்கியம் ’’ என்ற கொள்கைக்கு முரணாக இருக்கிறது இந்த அறிக்கை. `நிறுவனத்தைப் பொருத்த வரை ஒரே ஒரு சமூகக் கடமைதான். வெளிப்படையான, சுதந்திரமான போட்டி கள் மூலம் எந்த மோசடியிலும் ஈடுபடாமல், தனது வளங்களை, லாபத்தை அதிகரிக்கும் செயல்களில் பயன்படுத்த வேண்டும்' என்பதுதான் ஃபிரைடுமேனின் கொள்கை தத்துவம்.

`நிறுவனத்தின் லாபம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், சப்ளையர்கள், சமூக நலன், சுற்றுச்சூழல் மற்றும் சமூக மாற்றத்தை குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும்..’ என்கிறது அந்த புதிய அறிக்கை. உலகப் பொருளாதாரத்தின் ஒரு அங்கமாக இந்தியா இருப்பதால், அமெரிக்க நிறுவனங் களின் புதிய கொள்கைகள் இந்தியாவிலும் தவிர்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத் தும். 1991-ல் தொடங்கி 20 ஆண்டுகள் கடந்த பிறகும், இந்தியாவில் முதலாளித்துவம் இன்னும் வேரூன்ற முடியவில்லை. இதனால் ஏற்படும் விளைவுகள் நல்லதல்ல.

நிறுவனங்களின் நோக்கம் குறித்த புதிய அறிக்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். ஒரு நிறுவனம் தனது பங்குதாரர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அதே நிறுவனம் பல நோக்கங்களையும் நிறைவேற்ற வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

சமூகத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்புக்கும் நம்பகத்தன்மை அவசியம். உதாரணமாக, ஜனநாயகம் மற்ற ஆட்சி அமைப்புகளை விட சிறந்தது. அதற்குக் காரணம் ஆட்சியாளர்கள், ஓட்டு போடும் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் ஆளை மாற்றி விடுவார்கள். அதேபோல், ஒரு நிறுவனத்தின் லாபம், அது சிறப்பாக செயல்படுவதையும் தனது வளங்களை நல்ல முறையில் முதலீடு செய்திருப்பதையும் காட்டுகிறது. எனவே, அது தனது பங்குதாரர்களுக்கு கட்டுப்பட்டது. சிறப்பாக செயல்படவில்லை என்றால், நிறுவனத்தின் இயக்குநர்கள் அதன் தலைமை செயல் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய முடியும். இப்போது பிரச்சினை என்னவென்றால், ஏகப்பட்ட குறிக்கோள்கள் இருந்தால், நிறுவனத்தின் செயல்பாட்டை எப்படி அளவிட முடியும்.. அது யாருக்கு பதில் சொல்ல வேண்டியது இருக்கும் என்பதுதான்.

நிறுவனங்களின் புதிய அறிக்கை வெற்று கோஷம் என்பதுதான் இரண்டாவது பிரச்சினை. நிறுவனத்தின் லாபம் அதன் அனைத்து பங்குதாரர்களின் நலனையும் ஏற்கனவே கருத்தில் கொண்டுள்ளது. உதாரணமாக, வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யாமல் இருந்தால் அந்த நிறுவனம் வெற்றிகரமாக இருக்க முடியாது. போட்டியாளர்களின் தயாரிப்புகளை மக்கள் வாங்க ஆரம்பித்தால் இந்த நிறுவனமே இருக்காதே. இரண்டாவதாக, சிறந்த, திறமையான ஊழியர்களை பணியில் அமர்த்துவதைப் பொருத்தே அதன் செயல்பாடு இருக்கும். நல்ல சம்பளமும் கொடுத்து திறமையை வளர்ப்பதோடு, தனது கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் நிறுவனத்தில் பணியாற்றவே இப்போதுள்ள எம்.பி.ஏ படித்த இளைஞர்கள் விரும்பு கிறார்கள்.

உதாரணமாக, சுற்றுச்சூழலை காப்பாற்ற வேண்டும் என விரும்புகிறார்கள். இதுபோன்ற நிலையில் ஒரு நிறுவனத்தின் லாபம், ஊழியர்களுக்கு அளிக்கப்படும் மரியாதையைப் பொருத்து அமைகிறது. மூன்றாவதாக, தனக்கு மூலப் பொருட்களை அளிக்கும் நிறுவனங்களை விலையைக் குறைக்கும்படி கசக்கிப் பிழிந்தால், தரமற்ற பொருட்கள்தான் கிடைக்கும் என்பதையும் அதனால் தனது தயாரிப்பை அது பாதிக்கும் என்பதையும் நிறுவனங்கள் அறியும். எனவே சப்ளையர்களை பாதிப்பு இல்லாமல் நடத்த வேண்டும் என்பதும் அடிபட்டுப் போகிறது. கடைசியாக, சமூகத்தை ஆதரிப்பது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது. சமூகத்தில் ஒரு நிறுவனம் சிறந்த செயல்பாடுகள் மூலம் தனக்கான மதிப்பை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திக் கொள்கிறது. இதனால், விற்பனை அதிகரிக்கிறது. ஊழியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். நிறுவனத்தின் லாபமும் அதிகரிக்கிறது.

அமெரிக்க நிறுவனங்களின் புதிய இலக்குகளால் இந்திய நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். கடந்த 1991-ல் தொடங்கிய முதலாளித்துவ சீர்திருத்தங்களால் பெரிதும் பயனடைந்த இந்தியர்கள், பணக்காரர்கள்தான் பெரும் பலன் அடைந்திருப்பதாக நினைக்கிறார்கள். ஒரு விஷயத்தை அவர்கள் மறந்து விட்டார்கள். 1990-ல் நாடு முழுவதும் மொத்தமே ஒரு கோடி தொலைபேசி இணைப்புகள்தான் இருந்தன. இப்போது 100 கோடிக்கும் மேல். சீர்திருத்தங்களால் உருவான சந்தைப் போட்டி தான் இதற்குக் காரணம். சந்தை பொருளாதாரத்துக்கு ஆதரவான நிலைக்கும், தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான நிலைக்கும் உள்ள வேறுபாட்டை இந்தியர்களால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. சந்தை பொருளாதார நடவடிக்கையால், ஆரோக்கியமான போட்டி உருவாகும். உற்பத்தி அதிகரிக்கும். இதனால் விலைவாசி குறையும். பொருட்களின் தரம் உயரும். எல்லோரும் பயனடையலாம். மாறாக, தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான போக்கால், அரசின் அதிகப்படியான தலையீட்டால், சந்தைப் பொருளாதாரம் பாதிக்கப்படும். இதனால் முதலாளிகள் மட்டுமே பயன்படும் சூழல் உருவாகும். இந்தியாவில் சீர்திருத்தங்கள் மந்த வேகத்திலேயே செயல்படுத்தப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்பாக செயல்படாமல் இன்னமும் நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

தலைமைச் செயல் அதிகாரிகளின் லாபத்தைப் பற்றி பெரிதும் கவலைப்படாத இந்த அறிக்கையால், இந்தியாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு தாங்கள் செய்யும் வேலையின் மீது மரியாதை இல்லாமல் போய்விடும் என நான் அஞ்சுகிறேன். அவர்களின் தயாரிப்புகள் எப்படி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது என்பதை அவர்கள் மறந்து போவார்கள். எப்படி நிறுவனங்கள் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன என்பதையும் எப்படி அவை செலுத்தும் வரிகள் மூலம் அரசுகள் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் நடத்துகின்றன என்பதையும் மறந்து போவார்கள். இதனால் வேலையில் உற்சாகம் குறையும். ஏற்கனவே, நிறுவனத்தின் லாபத்தை விட சமூகத்துக்கு நிறுவனம் தரப்பில் செய்யப்படும் உதவிகளை வலியுறுத்தும் சிஎஸ்ஆர் சட்டங்கள் முக்கியம் என அவர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். சிஎஸ்ஆர் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். நடுத்தர வகுப்பைச் சேர்ந்த விதவைகளும் தங்கள் சேமிப்பை பங்குச்சந்தையில் முதலீடு செய்கின்றனர். தங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபத்தில் 2 சதவீதத்தை சிஎஸ்ஆர் சட்டம் திருடி விடுவதாக அவர்கள் நினைக்கின்றனர். உலகப் பொருளாதார சூழலில், இந்திய நிறுவனங்கள் போட்டி போட்டு வெற்றி பெற வேண்டும் என்றால், அதற்கான வழிமுறை இது அல்ல. ஏழை இந்தியாவை நடுத்தர வகுப்பினர் நிறைந்த இந்தியாவாக மாற்ற இப்படி செய்யக் கூடாது.

எல்லோருமே நல்லவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். உலகுக்கு சில நன்மைகளை செய்ய நினைக்கிறோம். அதனால்தான் பில் கேட்ஸ் கதாநாயகனாக இருக்கிறார். கடந்த 2008-ம் ஆண்டில் தாவோஸ் நகரில் நடந்த கூட்டத்தில், முதலாளித்துவம் இரண்டு இலக்குகளைக் கொண்டது என அறிவித்தார். லாபம் ஈட்டுவதும் சந்தை நடவடிக்கைகளில் பலனடையாதவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுமே அவை. அவரின் இந்தக் கருத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏழைகளை முன்னேற்ற பாடுபடும் என அவர் கூறவில்லை. மாறாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லாபத்தில் இருந்து டிவிடெண்ட் பெறுபவர்கள், தானம், தர்மம் செய்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதுதான் அதற்கான அர்த்தம். ஏழைகளுக்கு உதவுவது நிறுவனங்களின் சமூகக் கடமையாக இருக்கக் கூடாது. அது தனிநபரின் கடமையாக இருக்க வேண்டும். ஒரு நிறுவனம் நல்ல லாபம் ஈட்டி, அதன் பங்குதாரர்களாக இருப்பவர்களின் நலனைப் பாதுகாப்பதன் மூலம் சமூகத்துக்கு நன்மை செய்கிறது. பிறருக்கு உதவுவது என்பது நல்ல விஷயம்தான். ஆனால் அது ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும். இதுவே நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x