சிக்கிம் முதல்வர் தேர்தலில் போட்டியிட அனுமதி: தண்டனையை குறைத்தது தேர்தல் ஆணையம்

பிரேம் குமார் தமங்
பிரேம் குமார் தமங்
Updated on
2 min read


புதுடெல்லி
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையை 6 ஆண்டுகளில் இருந்து ஓராண்டும் ஒரு மாதமுமாக குறைத்து இன்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்தவர் பவன் குமார் சாம்லிங். இவரது தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) கட்சி, 1994 தேர்தலில் 19 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

தொடர்ந்து தேர்தல்களில் வென்று 25 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வந்தார் சாம்லிங். இந்தநிலையில் கடந்த கடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது.

32 தொகுகிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா 17 தொகுதிகளிலும், முன்பு ஆளும் கட்சியாக இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களிலும் வென்றன.

சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமங் (பிஎஸ் கோலே) முதல்வராக பொறுப்பேற்றார். தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்களில் 2 பேர் இரண்டு தொகுதிகளில் வென்றதால் தலா ஓரிடத்தை ராஜினாமா செய்தனர். இதனால் அந்த கட்சியின் பலம் 13 ஆக குறைந்தது.

பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் கடந்த மாதம் திடீரென பாஜகவில் இணைந்தனர். இதன் மூலம் முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.

சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமங் முதல்வராக உள்ளபோதிலும் எம்எல்ஏவாக இல்லை. 1990-ம் ஆண்டு அவர் அமைச்சராக இருந்தபோது கால்நடைத்துறையில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு ஒன்றில் தமாங்குக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.

இதனால் அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. 2018 ஆகஸ்ட் 10ம் தேதியில் இருந்து 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

இதனால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. முதல்வராக தற்போது பதவி வகிக்கும் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதையடுத்து தற்போது நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு மனு ஒன்றை அனுப்பினார். அதில் 1990-ம் ஆண்டு நடந்த ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற தமக்கு 2003-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது செல்லாது என அவர் வாதிட்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் அவருக்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை ஓராண்டும் ஒரு மாதமுமாக குறைத்து இன்று உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் அவர் இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கிம் இடைத் தேர்தலில் தமாங்கின் கிரந்திகாரி மோர்ச்சா, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in