

சூரத்,
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நவராத்திரி ஏற்பாடுகள் விதவிதமாக தொடங்கியுள்ளதை அடுத்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் தங்கள் உடலில் நாட்டு நடப்பு சார்ந்த ஓவியங்களைத் தீட்டிக் கொண்டனர்.
நவராத்திரி நிகழ்ச்சிகள் மாநிலத்திற்கு மாநிலம் ஒவ்வொருவிதமாகக் கொண்டாடப்படுகிறது. கோயில்களில் ஒன்பது நாட்களுக்கும் விதவிதமான அம்மன் தெய்வங்கள் காட்சியளிப்பது ஒரு புறம், வீடுதோறும் புராண கதைகளிலிருந்து கிராமிய மக்கள் வரை பலவிதமான பொம்மைகள் அடங்கிய கொலு மற்றொரு புறம் என விதவிதமாக நடைபெறும்.
குஜராத்தைப் பொறுத்தரை இன்றைய தொடக்க நாள் நிகழ்ச்சிகளில் கர்பா ராஸ் எனப்படும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. குடங்களை வரிசையாக தலையில்மீது அடுக்கி வைத்துக்கொண்டு குஜராத் கலைஞர்கள் ஆடிப் பாடும் நிகழ்ச்சி கர்பா ராஸ் எனும் இசை நடன நிகழ்ச்சி நடத்துவார்கள்.
சூரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி நடன நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராகிக்கொண்டிருந்த பெண்கள் தங்கள் உடலில் சில ஓவியங்களைத் தீட்டிக் கொண்டனர். இது வழக்கமான ஓவியம் அல்ல, மத்திய அரசின் சாதனைகளைத் தெரிவிக்கும் ஓவியங்கள் ஆகும்.
இந்த பெண்கள் சந்திராயன் -2 முதல் ஆர்டிகிள் 370 வரையிலான தலைப்புகளில் ஓவியங்களை வரைந்துகொண்டனர்.
ஓர் ஓவியம் சந்திரயான் -2 ஐக் காட்டுகிறது, மற்றொன்று போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது (அநேகமாக தொடர்ந்து வந்த எண்ணற்ற சர்ச்சைகளை எதிர்கொண்டுவரும் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் குறிப்புகளாக அவை இருக்கலாம்).
இந்தப் படங்களை ஏஎன்ஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.