

புதுடெல்லி
நாட்டின் 2-வது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கழகத்தை (பிபிசிஎல்) வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், பிபிசிஎல் நிறுவனத்தை தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்கு முன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அனுமதியைப் பெறுதல் அவசியமாகும். இது கடந்த 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசிஎல் நிறுவனத்தின் பங்குகளில் மத்திய அரசு தான் வைத்திருக்கும் 53.3 சதவீதப் பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. இதன் மூலம் இந்த ஆண்டு முதலீட்டு விற்பனை இலக்கான ரூ.1.05 லட்சம் கோடி இலக்கை அடைய உதவியாக இருக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது
கடந்த 27-ம் தேதி பங்குச்சந்தை நிலவரத்தின்படி பிபிசிஎல் நிறுவனத்தின் மதிப்பு ரூ.1.02 லட்சம் கோடி. இதில் 26 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்தால் கூட மத்திய அரசுக்கு ரூ.26.500 கோடி கிடைக்கும். அதன்பின் சந்தையில் நிறுவனம் நுழைவு, நிறுவனக் கட்டுப்பாடு, விற்பனை உள்ளிட்டவற்றில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கிறது.
இதற்குமுன் இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு இதேபோன்று பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் நிறுவனத்தை தனியார் மயமாக்க முயற்சித்தது.
ஆனால், இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேந்திர பாபு, மாத்தூர் ஆகியோர் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில் தனியார் மயமாக்கும் முன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறுவது அவசியம். சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் ஹெச்பிசில் நிறுவனத்தின் 34.1 சதவீதப் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய இருந்தது தடுக்கப்பட்டது. அப்போது இந்த இரு நிறுவனங்களின் பங்குகளையும் வாங்குவதற்கு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இங்கிலாந்தின் பிபி நிறுவனம், குவைத் பெட்ரோலியம், மலேசியாவின் பெட்ரோனாஸ், சவுதி அரேபியாவின் அராம்கோ, எஸார் ஆயில் போன்றவை ஆர்வம் காட்டின என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இப்போது மத்திய அரசு பிபிசிஎல் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தால், நல்ல விலையில் வாங்க சவுதி நிறுவனத்தின் அராம்கோ முதல், பிரான்ஸின் டோட்டல் எஸ்ஏ நிறுவனம் வரைபோட்டி போடுகின்றனர். இந்தியா வளர்ந்துவரும் மிகப்பெரிய எரிபொருள் சந்தை என்பதால், அவை ஆர்வம் காட்டுகின்றன.
கடந்த 1976-ம் ஆண்டு புர்மா ஷெல் என்ற பெயரில் இருந்த நிறுவனத்தை பிபிசிஎல் என்று மத்திய அரசு தேசிய மயமாக்கியது. கடந்த 1920களில் ராயல் டச் ஷெல், புர்மா ஆயில், ஆசியாட்டிக் பெட்ரோலியம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் புர்மா ஷெல் தொடங்கப்பட்டது.
அதேபோல கடந்த 1974-ம்ஆண்டு எஸ்ஸோ ஸ்டான்ட்ர்ட், லூப் இந்தியா நிறுவனத்திடம் இருந்த நிறுவனம் ஹெச்பிசிஎல் என்று தேசிய மயமாக்கப்பட்டது. பிபிசிஎல் நிறுவனத்துக்குச் சொந்தமாக கொச்சி, மும்பை, மத்தியப் பிரதேசத்தின் பினா, அசாமின் நுமாலிகார்க் ஆகிய இடங்களில் சுத்திகரிப்பு ஆலைகள் இருக்கின்றன. நாடு முழுவதும் 15 ஆயிரத்து 79 பெட்ரோல் நிலையங்களும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எல்பிஜி முகவர்களும் இருக்கின்றனர்.
பிடிஐ