Published : 28 May 2014 08:36 AM
Last Updated : 28 May 2014 08:36 AM

17 அமைச்சகங்களை இணைத்து 7 அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு: பிரதமர் மோடியின் புதிய பரிசோதனை

தொடர்புடைய அமைச்சகங்களை ஒரு அமைச்சரின் பொறுப்பில் விடுவது மேம்பட்ட பலனளிக்கும் என கருதி 17 அமைச்சகங்களை இணைத்து 7 வெவ்வேறு அமைச்சர்களின் கீழ் கொண்டு வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

‘குறைவான அமைச்சர்கள், நிறைவான ஆட்சி’ என்ற கொள்கை யின்படி புதிய சீரமைப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கப்பல், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகங்கள் நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் நிறுவனங்கள் விவகார அமைச்சகம் சேர்க்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை சுஷ்மா ஸ்வராஜ் வசம் உள்ள வெளியுறவுத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதியும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறையும் ஒன்றாக தொகுக்கப்பட்டு பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு வசம் தரப்பட்டுள்ளது.

முக்கிய துறைகள்

பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில் அங்கம் வகிக்கும் நிதி, வெளியுறவு, பாதுகாப்பு, உள்துறை ஆகிய முக்கிய துறைகளையும் பாஜகவே வைத்துக்கொண்டுள்ளது. ரயில்வே, வேளாண்மை போன்ற இதர முக்கிய துறைகளையும் அந்த கட்சியே வைத்துக் கொண்டுள்ளது.

உதம்பூர் தொகுதியிலிருந்து பாஜக டிக்கெட்டில் முதன்முறையாக வென்றுள்ள எம்பி ஜிதேந்திர சிங், பிரதமர் அலுவலக இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சிபிஐ மீது நிர்வாகக் கட்டுப்பாடு செலுத்தும் ஊழியர்கள் துறையும் அவரிடம் தரப்பட்டுள்ளது.

பிரதமரிடம் அணுசக்தி

ஊழியர்கள் நலம், பொதுமக்கள் குறைதீர்ப்பு, பென்ஷன், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறையை பிரதமர் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார்.

முக்கிய கொள்கை பிரச்சினைகள், எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத இதர துறைகளை பிரதமரே கவனித்துக் கொள்வார் என குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

‘மோடிக்கு மிகவும் நெருக்கமான வரான பியூஷ் கோயலுக்கு மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க மற்றும் மாற்று எரிசக்தி துறைகளின் இணை அமைச்சர் பதவி (தனிப்பொறுப்பு) தரப்பட்டுள்ளது.

சிவசேனை, தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி கட்சி, சிரோமணி அகாலி தளம் ஆகிய பாஜக கூட்டணி கட்சி களின் உறுப்பினர்களுக்கு 4 அமைச்ச கங்கள் தரப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x