

புதுடெல்லி
உலக அளவில் இந்தியாவின் மீதான ஆர்வமும், நன்மதிப்பும், கடந்த 5 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்
அமெரிக்காவுக்கு 7 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றிருந்தார். ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்புடன் சேர்ந்து ஒரே மேடையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அதன்பின் நியூயார்க் சென்ற பிரதமர் மோடி ஐ.நா. பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் முன் காலநிலை மாநாடு, தீவிரவாதம் ஒழிப்பு தொடர்பான மாநாடு, பசிபிக் தீவுகள் நாடுகள் கூட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்று, பல்வேறு நாடுகளின் தலைவர்களையும், தொழில்நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். அதன்பின் வெள்ளிக்கிழமை ஐ.நா.ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, அந்த நிகழ்ச்சி முடிந்தபின் நேற்று இரவு டெல்லி விமானநிலையம் வந்து சேர்ந்தார்.
டெல்லி வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமானநிலையத்தில் மேள தாளங்கள் முழங்க பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பின் பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டு நான் பிரதமராகப் பொறுப்பேற்றபின் நான் அமெரிக்காவுக்குச் சென்று இருந்தேன். இப்போதும் நான் அமெரி்ககாவுக்குச் சென்று வந்திருக்கிறேன். ஆனால், இந்த 5 ஆண்டுகளில் நான் உலகின் பார்வையிலும், உலகத் தலைவர்களின் பார்வையிலும், மிகப்பெரிய மாற்றத்தை உணர்கிறேன். இந்தியாவின் மீதான நன்மதிப்பும், உற்சாகமும் குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் 130 கோடி மக்களும் சேர்ந்து வலிமையான நிலையான அரசை தேர்ந்தெடுத்து இருப்பதுதான்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நமது இந்தியப் படைகள் சென்று துல்லியத்தாக்குதல் நடத்திவிட்டு திரும்பின. இந்திய படைகள் திரும்பிவரும் வரை நான் தூங்கவில்லை. அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புக்காக காத்திருந்தேன். இந்த நாள் இந்திய வீரர்களின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி நாள், நாட்டை பெருமை கொள்ளச் செய்த நாள்
நவராத்திரி பண்டிகை நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல்தொடங்குகிறது. அதற்கு அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு டெல்லி பாஜக சார்பில் நடன கலைஞர்களையும், மேள தாளம் இசைப்பவர்களை நியமித்திருந்தது. பிரதமர் மோடி விமான நிலையம் வந்து சேர்ந்ததும் இந்த கலைஞர்கள் பாங்கரா நடனம் ஆடியும், இசைத்தும் உற்சாகப்படுத்தினார்கள்.
பிடிஐ