

ரம்பன்
ஜம்மு காஷ்மீரில் ரம்பம் மாவட்டத்தில் உள்ள படோட்டி பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று ஏற்பட்ட மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்
இதுகுறித்து ஜம்மு ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி தேவேந்தர் ஆனந்த் கூறுகையில் " ரம்பன் மாவட்டத்தில் உள்ள படோடி பகுதியில் 5 தீவரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் நாங்கள் ஏறக்குறைய 9 மணிநேரம் தேடுதலில் ஈடுபட்டோம். அப்போது, தீவிரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பித்து, ஒருவீட்டுக்குள் புகுந்து கொண்டனர்.
அந்த வீட்டின் உரிமையாளரை பிணையக் கைதியாக தீவிரவாதிகள் பிடித்துவைத்துக் கொண்டனர். ஆனால், வீட்டில் இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
உடனடியாக அந்த வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் சுட்டனர். நீண்டநேரம் நடந்த துப்பாக்கி்ச்சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், அந்த வீட்டில் இருந்த உரிமையாளர் காயமின்றி மீட்கப்பட்டார். இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
இன்னும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கக் கூடும் அந்த வீடு இருக்கும் பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடந்து வருகிறது.
இதற்கிடையே இன்றுகாலையில், தாராமுண்ட் கிராமத்தில் அதிவிரைவு படையினர் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள், இதற்கு பதிலடியாக அதிவிரைவு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பட்டோடே பகுதயில் இன்று காலை ஒரு பேருந்தை அடையாளம் தெரியாத இருவர் மறித்துள்ளார்கள். ஆனால், சுதாரித்துக்கொண்ட பேருந்து ஓட்டுநர் அந்த நபர்களைப் பார்த்து நிற்காமல் வாகனத்தை ஓட்டி வந்து ராணுவத்தினரின் சோதனைச் சாவடியில் தகவல் அளித்தார். அதன்பின் அங்கு அதிவிரைவு படையினர் அந்த இடத்தில் சென்று சோதனை நடத்தியபோது அங்கிருந்தவர்கள் தப்பிவிட்டனர்.
இவ்வாறு ஆனந்த் தெரிவித்தார்
பிடிஐ