Published : 28 Sep 2019 11:56 AM
Last Updated : 28 Sep 2019 11:56 AM

மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அவரின் மகள்

மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வேவுக்கு ஒரு ரூபாய் வழங்கிய சுஷ்மா சுவராஜ் மகள் பன்சூரி : படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அவரின் மகள் பன்சூரி, வழக்கறிஞர் ஹரிஸ் சால்வேயை அழைத்து ஒரு ரூபாய் ஊதியத்தை வழங்கினார்.

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம்தேதி உடல்நலக்குறைவாலும், திடீர் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்தார்.

சுஷ்மா சுவராஜ் இறப்பதற்கு சில மணிநேரத்துக்கு முன் மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வேயுடன் தொலைப்பேசியில் பேசி மகிழ்ந்தார்.

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய அதிகாரி குல்புஷன் ஜாதவ் வழக்கில் வாதாடி வென்றதால் தனக்கு ஒரு ரூபாய் ஊதியம் வழங்கினால் மட்டும் போதும் என்று ஹரிஸ் சால்வே சுஷ்மா சுவராஜ் இறப்பதற்கு சில மணிநேரத்துக்கு முன் கூறியிருந்தார்.

இதைக் கேட்ட சுஷ்மா சுவராஜ்தன்னிடம் ஒரு ரூபாய் ஊதியத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஹரிஸ் சால்வேயிடம் தெரிவித்திருந்தார். ஆனால், ஹரிஸ் சால்வேயுடனான பேசி முடித்த சில மணிநேரத்தில் சுஷ்மா இந்த உலகை வி்ட்டுச் சென்றார்.

சுஷ்மா சுவராஜ் கையால் கடைசிவரை ஒரு ரூபாயை வாங்க முடியாமல் போய்விட்டதாக குல்புஷந் வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே ஆதங்கத்துடனும், உருக்கமாகவும் பேசிவந்தார். " என்னை மறுநாள் மாலை 6 மணிக்கு வந்து விலை மதிக்க முடியாத அந்த பணத்தை பெற்றுக்கொள் என்று சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார், ஆனால், தன்னால் பெற முடியவில்லை" என சால்வே ஆதங்கம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வழக்கறிஞர் ஹரிஸ் சால்வேயை நேற்று அழைத்த சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி அவரிடம் தனது தாயின் கடைசி ஆசையான ஒரு ரூபாய் ஊதியத்தை வழங்கினார்.

இதுகுறித்து ஹரிஸ் சால்வே நிருபர்களிடம் கூறுகையில், " குல்புஷன் யாதவ் வழக்கில் நான் வென்றுவிட்டால், எனக்கு விலைமதிக்க முடியாத வகையில் ஒரு ரூபாய் ஊதியம் தருவதாக சுஷ்மா தெரிவித்திருந்தார். நானும் நிச்சயமாக உங்களிடம் வந்து பெற்றுக்கொள்வேன் என்றேன். ஆனால், அவரிடம் பெறமுடியவில்லை, இப்போது அவரின் மகளிடம் பெறுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞரான ஹரிஸ் சால்வே அரசியலமைப்புச் சட்டம், வணிக மற்றும் வரிச்சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர், ஒரு வழக்கிற்கு ஊதியமாக கோடிக்கணக்கில் பெறும் சால்வே ஒரு ரூபாய் மட்டும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x