Published : 27 Sep 2019 06:23 PM
Last Updated : 27 Sep 2019 06:23 PM

உ.பி. அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்: குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட டாக்டர் கஃபீல் கான்

கோரக்பூர், ஐ.ஏ.என்.எஸ்

ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளையின்றி சுமார் 60 குழந்தைகள் உ.பி.யில் மரணமடைந்ததன் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் கஃபீல் கான் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று அரசு நியமித்த விசாரணை அறிக்கை விடுவித்ததையடுத்து ‘உ.பி.அரசு என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.

மாநில அரசு விசாரணை அறிக்கை டாக்டர் கஃபீல் கானை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது. பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் நல மருத்துவராக கஃபீல் கான் பணியாற்றிய போதுதான் சுமார் 63 குழந்தைகள் ஆக்சிஜன் சப்ளையின்றி மரணமடைந்தன.

இவரை பணிநீக்கம் செய்த போது ஆக்சிஜன் சப்ளை பற்றாக்குறை பற்றி இவர் தன் மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை என்று காரணம் கூறியது உ.பி.அரசு. பிறகு டாக்டர் கஃபீல் கான் உட்பட 9 பேர் மீது எஃப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டு டாக்டரை செப்.2, 2017-ல் கைது செய்தது போலீஸ்.

டாக்டர் கபீல் கானுக்கு எதிராக மருத்துவ அலட்சியக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இல்லை என்று விசாரணை அறிக்கை அவருக்கு கிளீன் சிட் வழங்கியது.

இந்நிலையில் தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்கு டாக்டர் கஃபீல் கான் கூறும்போது, “நான் தவறு செய்யவில்லை என்பதை நான் நன்கு அறிவேன். அன்றைய துயர் நிரம்பிய நாளில் நான் என்னால் முடிந்ததை மருத்துவராக மனிதனாகச் செய்தேன், ஆனால் குழந்தைகளைக் காப்பாற்ற நான் எடுத்த முயற்சிகளுக்காக சிறைக்கம்பிகளுக்குள் நான் தள்ளப்பட்டேன்.

ஊடகங்கள் என்னை திட்டித்தீர்த்தன, என் குடும்பம் சொல்லொணா துன்புறுத்தலுக்கு ஆளானது. என் பணியை இழந்தேன்.

இந்த குழந்தைகள் மரணத் துயரம் மனிதர்களால் அலட்சியத்தினால் ஏற்பட்ட ஒன்று, ஆக்சிஜன் சப்ளையருக்கு நிலுவை தொகை உள்ளது உடனடியாக கொடுக்காவிட்டால் சப்ளை நிறுத்தப்படும் என்று வந்த கடிதத்தைப் பெற்றவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள், அவர்கள் உடனடியாக நிலுவைத் தொகையை செலுத்தியிருக்க வேண்டும்.

ஆகவே இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.” என்றார்.

அன்றைய தினம் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தம் பற்றிய தகவல்களை அவர் மூத்த அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளதாகவும் தன் சொந்த முயற்சியில் 7 ஆக்சிஜன் சிலிண்டர்களை டாக்டர் கான் வழங்கியதாகவும் அரசு நியமித்த முதன்மைச் செயலர் ஹிமான்ஷு குமார் தலைமை அறிக்கை தெரிவித்து அவரை விடுவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x