

முல்லை பெரியாறு அணையில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தேவையில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணை யின் பாதுகாப்புக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரை பணி யமர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது. இந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், முல்லை பெரியாறு அணையில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை பணியமர்த்த தேவையில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே கேரள அரசு கோரினால் அணைக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரை பணியில் அமர்த்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணையை தமிழகம் பராமரித்து வருகிறது. ஆனால் அணை பாதுகாப்புப் பணியை கேரள போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான செலவை தமிழகம் அளித்து வருகிறது.
முன்னதாக முல்லை பெரியாறு அணைப் பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை பாதுகாப்புக்கு நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. முல்லை பெரியாறு அணை பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும், தமிழக அரசு அதிகாரிகள் பராமரிப்பு பணிகளுக்கு செல்லும் போது கேரளா அனுமதி மறுப்பதாகவும், தமிழகம் மனுவில் கூறியிருந்தது.
இதற்கு பதிலளித்த கேரளா, முல்லை பெரியாறில் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு தேவையில்லை என்று கூறியது. இது தொடர்பாக மத்திய அரசு இப்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அது தமிழகத்தின் கோரிக்கைக்கு எதிராக அமைந்துள்ளது.