Published : 27 Sep 2019 05:07 PM
Last Updated : 27 Sep 2019 05:07 PM

பாஜகவுடன் தொகுதி பங்கீட்டில் சிக்கல்; சிவசேனா நாளை ஆலோசனை

மும்பை
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் இடையே தொகுதி பங்கீடு செய்வதில் சிக்கல் இருந்து வரும் நிலையில் கட்சி மூத்த நிர்வாகிகளின் அவசர கூட்டத்துக்கு சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது.

மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இரு கட்சிகளும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

இதுபோலவே நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள பாஜகவும், சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இருகட்சிகளும் 135 தொகுதிகளில் போட்டியிடவும், மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கவும் தொடக்கத்தில் முடிவு செய்தன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு அதிகமான இடம் வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியதால் கூட்டணி முறிந்து இருகட்சிகளும் தனித்து போட்டியிட்டன. 122 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக 63 இடங்களில் வென்ற சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

எனினும் கடந்த மக்களவைத் தேர்தலில் இருகட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. கடந்த மக்களவைத் தேர்தலில் சிவசேனாவை விட பாஜக கூடுதல் தொகுதிகளில் வென்றதால் தங்களுக்கு கூடுதல் தொகுதி வேண்டும் என மகாராஷ்டிர மாநில பாஜக நிர்வாகிகள் கோரி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதகிகளில் பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால் பாஜக 23 தொகுதிகளிலும், சிவசேனா 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜக கூடுதலாக வாக்குகளையும் பெற்றிருந்தது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதலாக இடங்கள் வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.

சிவசேனாவுக்கு 120 தொகுதிகள் மட்டுமே வழங்க பாஜக முன் வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதனை ஏற்க சிவசேனா மறுத்து வருகிறது. இதனால் இருகட்சிகள் இடையே கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளது. 126 முதல் 129 தொகுதிகள் வரை தங்களுக்கு தர வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியதாக தெரிகிறது.

அதுபோலவே முதல்வர் பதவியை சுழற்சி முறையில் இருகட்சிகளும் பெறும் வகையில் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என சிவசேனா வற்புறுத்தி வருகிறது. மேலும் குறிப்பிட்ட தொகுதிகளை பெறுவதிலும் இருகட்சிகள் இடையே போட்டி நிலவி வருகிறது.

இந்தநிலையில் பாஜக மகாராஷ்டிரா மாநில நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் அமித் ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

மகாராஷ்டிர முதல்வர் பட்னவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் சிவசேனாவுக்கு 120 தொகுதிகளை மட்டுமே ஒதுக்குவது என இறுதியாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என சிவசேனா அறிவித்துள்ளது. கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x