

லக்னோ,
சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங் லக்னோவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
இன்று காலை, கல்யாண் சிங் நீதிமன்றத்தில் சரணடைந்ததும் அவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று இடிக்கப்பட்டது. இந்துக் கரசேவகர்கள் ராமர் பிறந்த இடத்தைக் கைப்பற்றுவதாகத் தெரிவித்து மாபெரும் பேரணியோடு வந்து பாபர் மசூதியை இடித்தனர்.
சர்ச்சைக்குரிய ராமஜன்மபூமி-பாபர் மசூதி வழக்கு நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு தொடர்பாக சர்ச்சைக்குரிய ராம ஜன்மபூமி-பாபர் மசூதி தளத்தில் மசூதியை இடிக்க சதி செய்ததாக எல்.கே. அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்களை உள்ளடக்கியது.
ராஜஸ்தான் ஆளுநராக இருந்த கல்யாண்சிங் பதவிக்காலம் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் முடிந்தது. இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின்போது அன்றைய உ.பி.முதல்வராக இருந்த கல்யாண் சிங்குக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. சம்மன் கிடைத்ததும் கல்யாண்சிங் இன்று லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முன்னாள் ஆளுநரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு கோரி சிபிஐ நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொண்டது.
ராஜஸ்தான் ஆளுநராக கல்யாண் சிங் இருந்த பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு சட்டரீதியான விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் 27 அன்று அவரை ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் கடந்த வாரம் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) உத்தரவிட்டது.
"ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கல்யாண் சிங் தனது பதவியின் கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தெரிந்துகொண்டு, கல்யாண் சிங் நீதிமன்றத்திற்கு செப்டம்பர் 27 அன்று நேரில்வர சம்மன் அனுப்ப சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நான்கு பிரிவுகளில் குற்றச்சாட்டு
சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்த உ.பியின் முன்னால் முதல்வர் கல்யாண் சிங் மீது 153 ஏ, 153 பி (சட்டவிரோத மக்கள் கூட்டம்), 295 ஏ (மத உணர்வுகளைத் தூண்டியது), 505 (பொதுஅமைதியைக் குலைப்பது) மற்றும் 120 பி பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அதன்பிறகு, அவரது ஆலோசகர்கள் ஜாமீன் பெற விண்ணப்பித்து தனிப்பட்ட பத்திரத்தில் ரூ. இரண்டு லட்சம் பிணையாக செலுத்தினர். நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.
-ஐஏஎன்எஸ்