ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும்: நிதிஷ், லாலு, மாஞ்சி வலியுறுத்தல்

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும்: நிதிஷ், லாலு, மாஞ்சி வலியுறுத்தல்
Updated on
1 min read

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013 வரை சமூக பொருளாதார ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முக்கிய விவரங்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அண்மையில் வெளியிட்டார். அதில் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது:

பின்தங்கிய சமுதாய மக்களை முன்னேற்றுவதில் மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு அக்கறை இல்லை. அதனால்தான் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வெளி யிடவில்லை. இது மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி யாகும். உடனடியாக அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும் என்றார்.

லாலு பிரசாத் கூறியதாவது: தங்கள் சமுதாய மக்கள்தொகை விவரங்களை அறிய ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடக் கோரி வரும் 13-ம் தேதி பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஜிதன்ராம் மாஞ்சி கூறியதாவது: மக்கள் நலத்திட்டங்களை செயல் படுத்த ஜாதிவாரி புள்ளிவிவரங்கள் மிகவும் அவசியம். அந்த விவரங் களை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இதன்மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் தொகை, அவர்களின் வாழ்வியல் சூழ்நிலை உள்ளிட்ட தகவல்களை அறிய முடியும்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் சில சாதிய தலைவர்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ், பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை நீண்ட காலம் ஆட்சி நடத்தியுள்ளன. ஆனால் அந்த கட்சிகளின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவில்லை. அதற்கு 3 கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in