Published : 27 Sep 2019 03:04 PM
Last Updated : 27 Sep 2019 03:04 PM

தேவைப்படும்போது அழைக்கிறோம்: அமலாக்கப்பிரிவு அலுவலகம் செல்லும் திட்டத்தை கைவி்ட்டார் சரத் பவார்

மும்பை

ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாகக் கூறப்படும் மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி விவகாரத்தில் தேவைப்படும்போது விசாரணைக்கு அழைக்கிறோம் என்று அமலாக்கப்பிரிவு விடுத்த கோரிக்கையை ஏற்று அமலாக்கப்பிரிவு அலுவலகம் செல்லும் திட்டத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கைவிட்டார்.

மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்குப் பதிவு அடிப்படையில் அமலாக்கப் பிரிவும் வழக்குப் பதிவு செய்தது.
அந்த வழக்குப் பதிவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சரத் பவாருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக சரத் பவார் நேரில் விசாரணைக்கு ஆஜராக இன்னும் அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பவில்லை. ஆனால், அழைப்பாணை இன்றி, அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு இன்று பிற்பகலில் செல்ல சரத் பவார் முடிவு செய்திருந்தார்.

தெற்கு மும்பையில் உள்ள பாலார்ட் பயர் பகுதியில் இருக்கும் அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு இன்று சரத்பவார் செல்ல இருப்பதால், மும்பையில் பெரும் பதற்றம் நிலவி, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூடினார். இதனால் அமலாக்கப்பிரிவு அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான தேசியவாத காங்கிரஸ் கட்சியினரைக் கைது செய்தனர்.

ஜிதேந்திர அவாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ

இந்நிலையில் அமலாக்கப்பிரிவு சார்பில் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு மின்அஞ்சல் அனுப்பப்பட்டது. அதில், " ரூ.2500 கோடி மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் தொடர்பாக எங்கள் அலுவலகத்துக்கு வந்து தகவல்களை பரிமாறிக்கொள்ள இருப்பதாக அறிந்தோம். விசாரணைக்கு ஒத்துழைக்கும் உங்களின் செயலை வரவேற்கிறோம். ஆனால், இன்று நீங்கள் வரத் தேவையில்லை. தேவைப்படும்போது நாங்கள் உங்களுக்கு அழைப்பானை கொடுக்கிறோம், அப்போது நீங்கள் வரலாம்" எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அமலாக்கப்பிரிவு அலுவலகம் செல்லும் தனது திட்டத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கைவிட்டார்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நிருபர்களிடம் கூறுகையில் " நான் அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு இன்று செல்லவில்லை. தேவைப்படும் போது விசாரணைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன்.நாங்கள் அரசியலில் இருக்கிறோம். யாரேனும் விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்த நினைத்தால் அது வெற்றி பெறாது. எனக்கு ஆதரவு அளித்த ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சிவசேனா கட்சிக்கு நன்றி தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜிதேந்திர அவாத் கூறுகையில், " மும்பை போலீஸ் ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் கட்சித் தலைவர் சரத்பவாரிடம் இன்று அமலாக்கப்பிரிவு அலுவலகம் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்கள். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இன்று சென்றால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்ததால், சரத்பவார் தனது திட்டத்தை ஒத்திவைத்தார்" எனத் தெரிவித்தார்


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x