

பாலா
கேரள மாநிலம் பாலா தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிடும் மாணி சி.கப்பென் 2943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கேரளாவில் பாலா சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏ.வாக இருந்தவர் கேரள காங்கிரஸ் (எம்) பிரிவு தலைவர் கே.எம்.மாணி(86). இவர் கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். இதனால், பாலா தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 23-ம் வாக்குப்பதிவு நடந்தது.
மறைந்த கே.எம்.மாணி 1965-ம் ஆண்டு முதல் பாலா தொகுதி எம்எல்ஏ.வாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். அவர் மறைந்த நிலையில், 54 ஆண்டு களுக்குப் பிறகு தேர்தல் நடந்தது. கே.எம். மாணியுடன் அரசியலில் நெருக்கமாக பணியாற்றிய ஜோஸ் டாம் புலிக்குன்னில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடு கிறார்.
பாஜக சார்பில் கட்சியின் கோட்டயம் மாவட்ட தலைவர் என்.ஹரியும், இடதுசாரிகள் ஆதரவோடு தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் மாணி சி.கப்பென் ஆகியோர் உட்பட 13 பேர் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தது. தொடக்கம் முதலே இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிடும் மாணி சி.கப்பென் முன்னிலை வகித்து வந்தார்.
வாக்குகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், இடதுசாரி வேட்பாளர் மாணி சி கப்பென் 54137 வாக்குகளும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் டாம் புலிக்குன்னில் 51194 வாக்குகளும் பெற்றனர.
இதன் மூலம். 2943 வாக்குகள் வித்தியாசத்தில் கப்பென் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ஹரி 18044 வாக்குகள் பெற்றுள்ளார். கே.எம். மாணி இருந்தபோது 3 முறை கப்பென் அவரை எதிர்த்து 3 முறை போட்டியிட்டு தோல்வியடைந்தார். கே.எம்.மாணியின் மரணத்துக்கு பிறகு கப்பென் வெற்றி பெற்றுள்ளார். 54 ஆண்டுகளுக்கு பிறகு கேரள காங்கிரஸ் இந்த தொகுதியை இழந்துள்ளது.