Published : 27 Sep 2019 01:02 PM
Last Updated : 27 Sep 2019 01:02 PM

மேகவெடிப்பு; ஹைதராபாத்தில் 15 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது; நள்ளிரவில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள்

ஹைதராபாத்
ஹைதராபாத்தில் நள்ளிரவில் மேகவெடிப்பு ஏற்பட்டு 15 செ.மீ மழை கொட்டித்தீர்த்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததுடன், மரங்களும் முறிந்து விழந்தன. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மழை, வெள்ளத்தில் சிக்கினர்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மகாராஷ்டிர, பிஹார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.

மழையால் பல பகுதிகள் நீரில் மூழ்கின. 4 நாட்கள் வரை பாதிக்கப்பட்டிருந்த ரயில், விமானம் மற்றும் சாலை போக்குவரத்து முடங்கியது. இந்த மழையால், கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான அணைகளும் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. . மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பலத்த மழையால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை, வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.


(படவிளக்கம்:ஹைதராபாத்தில் கொட்டித் தீர்த்த மழையில் மூழ்கும் நிலையில் காரை மீட்கும் மக்கள்)

இந்தநிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நள்ளிரவில் மேகவெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டித் தீர்த்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் நள்ளிரவில் ஒரே நேரத்தில் 15 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ஒரு சில மணிநேரத்தில் கொட்டித்தீர்த்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் முக்கிய ஏரியான உசேன் சாகர் ஏரி நிரம்பி வழிகிறது. நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. உசேன் சாகர் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் 200 வீடுகளின் சுவர்கள் இடிந்துள்ளன. ஏராளமான மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பலரும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் செய்வதறியாது திகைத்தனர். உடனடியாக பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x