

மும்பை
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீது எடுக்கப்படும் நடவடிக்கை அரசியல் சந்தர்ப்பவாதம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்குப் பதிவு அடிப்படையில் அமலாக்கப் பிரிவும் வழக்குப் பதிவு செய்தது.
அந்த வழக்குப் பதிவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இது குறித்து சரத் பவாரும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சரத் பவார் பெயர் சேர்க்கப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘இந்த அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிர்கட்சி தலைவர்களின் வரிசையில் கடைசி இலக்காகி இருப்பது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெறும் நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ எனக் கூறியுள்ளார்.