

கயா,
தங்கள் மூதாதையர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக, பிஹார் மாநிலத்தின் கயா நகரில் உள்ள பால்கு நதிக்கரையில் ஆறு ரஷ்ய பெண்கள் 'பிண்ட தானம்' வழங்கினர்.
புத்தர் ஞானம் பெற்ற இடமாக நாம் அறிந்துள்ள கயா வரலாற்றில் பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள நகரமாகும். இந்துக்களின் புனிதத் தலமாகவும் இந்நகரம் விளங்கி வருகிறது. பாட்னாவிலிருந்து 100 கி.மீ.தெற்கில் உள்ளது கயா, முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்து சமயத்தினர் நீத்தார் வழிபாடு செய்வதற்கு இந்திய அளவில் உகந்த தலமாகவும் கயா விளங்குகிறது.
நேற்று காலை, பால்கு ஆற்றங்கரையில் விஷ்ணுபாதம் கோயில் அருகில் உள்ள தேவ்காட் பகுதிக்கு 6 ரஷ்ய பெண் யாத்ரீகர்கள் வந்தனர். இங்கு வழக்கத்தில் உள்ள இந்து மதச் சடங்குகளின் வழியே தங்கள் மூதாதையர்களை அவர்கள் வழிபட்டனர். இந்திய பெண்களுக்கான ஆடைகளையே அணிந்து பிண்ட தானம் வழங்கினர்.
சடங்குகளை செய்ய யாத்ரீகர்களுக்கு உதவிய பூசாரி லோக்நாத் கவுர் இதுகுறித்து கூறியதாவது:
"பிண்ட தானம் செய்வதற்காக வந்துள்ள இந்தப் பெண்கள் ரஷ்யாவின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்கள் எலெனா காஷிட்சினா, யூலியா வெரெமின்கோ, எரெஸ்கோ மாக்ரிதா, ஆக்ஸ்னா கலிமென்கோ, இலோனோரா கதிரோபா மற்றும் இரினா குச்மிஸ்டோபா ஆகியோர். இவர்கள் தங்கள் சடங்குகளைச் செய்வதமூலம் முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு அமைதியைத் தரும் என்று நம்புகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பித்ரா பக்ஷா நிகழ்ச்சியில், பல்வேறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஒரு குழுவினர் தங்கள் மூதாதையர்களுக்கு ஆத்மசாந்தியைப் பெற இங்கு வருகிறார்கள். பீகார் மாநிலத்தில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட்ட பின்னர் அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள்.
இவ்வாறு லோக்நாத் கவுர் தெரிவித்தார்.
பிண்ட தானம் வழங்க வந்த ரஷ்ய பெண்களில் ஒருவரான எலெனா காஷிட்சினா, “இந்திய நாடு, மதம் மற்றும் ஆன்மீகத்தின் நிலம் கயாவுக்கு வரும்போது எனக்குள் ஓர் அமைதி வருவதை நான் உணர்கிறேன். என் முன்னோர்களின் ஆத்மாவுக்கு அமைதி அளிக்க நான் இங்கு வந்துள்ளேன்" என்றார்.
கடந்த ஆண்டு, ரஷ்யா, ஸ்பெயின், ஜெர்மனி, சீனா, கஜகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 27 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் மூதாதையர்களின் இரட்சிப்புக்காக 'பிண்ட தானம்' வழங்கினர்.
'பிண்ட தானம்' சடங்கிற்காக மில்லியன் கணக்கான மக்கள் கயாவுக்கு வருகிறார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் 28 க்குள் சுமார் எட்டு லட்சம் பக்தர்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஐஏஎன்எஸ்