

கொச்சி,
மராடு அடுக்குமாடிகளை இடிப்பதற்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து மராடுவின் நான்கு கட்டிட வளாகங்களிலும் இருளோடிய குடியிருப்புகளில் மக்கள் தவித்து வருகின்றனர். இங்கு விரைவில் குடிநீர் வழங்கலும் நிறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், உச்ச நீதிமன்ற உத்தரவை மாநில அரசு நிறைவேற்ற வேண்டியிருக்கும் நிலையில் மராடு அடுக்குமாடிகளைக் கட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் குடியிருப்பாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தர வேண்டுமென சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.
எர்ணாகுளம் பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல (சிஆர்இசட்) விதிகளை மீறியதற்காக மராடு அடுக்குமாடிக் கட்டிடங்களை இடிக்கும்படி, கடந்த மே 8 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. குடியிருப்பில் உள்ளவர்கள் யாரும் காலி செய்யாததால் கேரள அரசு இன்னும் கட்டிடத்தை இடிக்க இயலாத நிலையில் உள்ளது.
இதற்காக கடந்த செப்டம்பர் 23 அன்று உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்குக் கண்டனம் தெரிவித்தது. மேலும் கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய ஒரு பகுதியில் கட்டுமானம் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், ஒரு மாதத்திற்கு முன்னர் கேரளாவில் வெள்ளப் பேரழிவு ஏற்பட்டதாகவும் நீதிமன்றம் கூறியது. இதனை அடுத்து கடலோர ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதற்காக குடியிருப்புகளைக் கட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.
முன்னதாக, நேற்று முன்தினம் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கேரள அரசு, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தைத் துண்டிக்கவும் கேரள மாநில மின்சார வாரியம் மற்றும் கேரள நீர் ஆணையத்திற்கு கடிதம் எழுத முடிவு செய்தது. அதனை அடுத்து மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு நடுவே, மராடு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இன்று அதிகாலை 5 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனை அடுத்து மக்கள் வெளியே வந்து ''இது மனித உரிமை மீறல்'' என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிளாட் உரிமையாளர்களின் பிரதிநிதி இதுகுறித்து கூறுகையில், "எங்களை வீதிகளில் தூக்கி எறிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாங்கள் குற்றவாளிகள் அல்ல. நாங்கள் எங்கள் வீடுகளை விட்டு வெளியேற மாட்டோம். நாங்கள் இங்கேயே இருப்போம், வளாகங்களில் வசிப்பவர்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற மாட்டார்கள். மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவார்கள்'' என்றார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில சிபிஎம் கட்சி செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், ''மராடு அடுக்குமாடிக் குடியிருப்புப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் மிகவும் உறுதியான முடிவை எடுத்துள்ளது. மாநில அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய நிலையில் உள்ளது. மராடு அடுக்குமாடி கட்டிடத்தைக் கட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் குடியிருப்பாளர்களுக்கு வாங்கிய பணத்தை திருப்பி அளிக்க வேண்டும். பில்டர்கள் பணத்தை திருப்பி அளிக்கவில்லையென்றால் அரசாங்கம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியாக வேண்டிய இடத்தில் அரசாங்கம் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளோ நாங்கள் அவர்களுக்கு எதிராக இருப்பது போல சித்தரித்து வருகிறது'' என்றார்.