

புதுடெல்லி
பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங் ஆகியோர் இன்று பாஜகவில் இணைந்தனர்.
ஹரியாணாவை மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத். தனது 8 வயது முதலே மல்யுத்தத்தில் ஈடுபட்டு வந்தவர். 2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டிலும், 2012-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு மல்யுத்தத்திலும் இவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றார். அதன் பிறகு ஹரியாணா மாநில காவல்துறையில் பணியாற்றி வந்தார்
இந்தநிலையில் சமீபத்தில் திடீரென அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் அவர் இன்று பாஜகவில் இணைந்தார்.
(யோகேஷ்வர் தத் - கோப்புப் படம்)
அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அவர் பாஜக வேட்பாளராக களமிறங்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து யோகேஸ்வர் தத் கூறுகையில் ‘‘காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மிகப்பெரிய சாதனை. யாராலும் செய்ய முடியாத சாதனையை பிரதமர் மோடி செய்துள்ளார். இதற்காக நாடே அவரை பாராட்டுகிறது. மோடி என்னையும் ஈர்த்துள்ளார். இதனால் பாஜகவில் இணைய முடிவு செய்தேன்’’ என்றார்.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்கும் இன்று பாஜகவில் இணைந்தார். ஹரியாணா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பரலா முன்னிலையில் இருவரும் பாஜகவில் இணைந்தனர்.
பாஜகவில் இணைந்தது பற்றி சந்தீப் சிங் கூறுகையில் ‘‘பிரதமர் மோடி நேர்மையான தலைவர். அவரது தலைமையில் பணியாற்ற மிகவும் விருப்பமாக உள்ளேன்’’ என்றார்.