கர்நாடகாவில் 15 தொகுதிகள் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

கர்நாடகாவில் 15 தொகுதிகள் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி
கர்நாடகாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை 15 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் 14 மாதங்கள் ஆட்சியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கடந்த ஜூலை மாதம் கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் 105 எம்எல்ஏக்களுடன் இருக்கும் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, ஆளுநர் வாஜூபாய் வாலாவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி, 4-வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார்.

முன்னதாக குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளின் கொறாடா பிறப்பித்த உத்தரவை மீறியதையடுத்து, இரு கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்களை 15 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் இந்த சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடியும் வரை அவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்தார்.

சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக ஜேடிஎஸ், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களின் தொகுதிகளில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபாநாயகரின் உத்தரவால் அவர்கள் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதை எதிர்த்து அவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சபாநாயகர் உத்தரவு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை 15 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலை ஒத்தி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in