

புதுடெல்லி, பிடிஐ
2003ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை கேள்விக்குட்படுத்தியதற்காக உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு தொடர்பாக முஸ்லிம் தரப்பில் வாதிட்டவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு முஸ்லிம் தரப்பினருக்காக வாதாடிய வழக்கறிஞர் ராஜீவ் தவண் ஏ.எஸ்.ஐ. அறிக்கையின் தொகுப்புரையின் ஆசிரியர் யார் என்று கேட்க தாங்கள் உண்மையில் விரும்பவில்லை என்று கூறினார்.
“ஆய்வறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஆசிரியர் பெயர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஆய்வறிக்கை மற்றும் அதன் சாராம்சத் தொகுப்புரையின் ஆசிரியத்தன்மையை கேள்வி கேட்க வேண்டிய தேவையில்லை, எனவே இது தொடர்பாக நீதிபதிகளின் நேரத்தை வீணடித்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கிறோம். அந்த அறிக்கைக்கு ஆசிரியர் பெயர் உள்ளது” என்றார் முஸ்லிம்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜிவ் தவண்.
புதன் கிழமையன்று முஸ்லிம் தரப்புக்காக வாதாடும் இன்னொரு வக்கீல் மீனாட்சி அரோரா, அறிக்கையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதியவர் யார் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் சாராம்ச தொகுப்புரையில் ஆசிரியர் பெயர் இல்லை என்றார்.
நீதிமன்ற அமர்வு இருதரப்பினரையும் எப்போது வாதங்களை நிறைவு செய்வீர்கள், அக்டோபர் 18ம் தேதிக்குப் பிறகு நேரம் ஒதுக்க முடியாது எனவே அதற்குள் வாதங்களை முடித்து விடுவீர்களா என்றார்.
“அக்டோபர் 18ம் தேதி தாண்டி கால அவகாசம் இல்லை, இன்னும் 4 வாரங்களில் நாங்கள் தீர்ப்பு அளித்து விட்டால் அது உண்மையில் ஆச்சரியமான விஷயமே” என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்தார்.