

புதுடெல்லி
உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதி மக்களை கேஜ்ரிவால் அவமதித்து விட்டதாக கூறி பாஜக சார்பில் டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் கடந்த செப்டம்பர் 1 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி 19 லட்சம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட உள்ளதாக வடகிழக்கு மாநிலங்களும் அறிவித்தன.
சென்ற வாரம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில் விரைவில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்று பேசியிருந்தார்.
இந்தக் கருத்தை ஆதரிக்கும்விதமாக நேற்று பாஜகவைச் சேர்ந்த வடகிழக்கு டெல்லி எம்பியான மனோஜ் திவாரி, டெல்லியில் தேசிய குடிமக்களின் பதிவேடு (என்.ஆர்.சி) அவசியம் தேவை என்று கோரிக்கை வைத்து பேசியிருந்தார்.
இதற்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பதில் அளித்து பேசுகையில் ‘‘பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுமட்டுமின்றி டெல்லியில் என்.ஆர்.சி. நடைமுறைப்படுத்தப்படுவதுதான் இதற்கு தீர்வு என்றும் கூறுகிறார்.
மனோஜ் திவாரி கூறுவதுபோல டெல்லியில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தும் நிலை ஏற்பட்டால், அவ்வாறு முதலில் டெல்லியைவிட்டு வெளியேற வேண்டியது மனோஜ் திவாரிதான்’’ என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மனோஜ் திவாரி கூறுகையில் ‘‘இந்திய வருவாய் துறை அதிகாரியாக பணியாற்றிய அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு என்ஆர்சி என்றால் என்னவென்று தெரியவில்லை. உத்தர பிரதேசதத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி வந்தால் எப்படி வெளிநாட்டவர்களா ஆவர். வெளி மாநிலத்துக்கும், வெளிநாட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார். உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதி மக்களை அவமதித்து விட்டார்’’ எனக் கூறியிருந்தார்.
இந்தநிலையில் உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதி மக்களை கேஜ்ரிவால் அவமதித்து விட்டதாக கூறி பாஜக சார்பில் டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது. கேஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு பாஜக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.