

கயா,
கடந்த பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் புல்வாமாவில் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு கயாவில் ஆத்மா சாந்தியடையும் சடங்கு ஒன்றை நடத்தியுத்தியுள்ளார் பீகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்.
கடந்த பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ராணுவ வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 40 சிஆர்பிஎப் வீரர்கள் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் நினைவாக அவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக பீகாரில் உள்ள கயாவில் நேற்று இதற்கான சடங்கு நடைபெற்றது. கயாவில் அமைந்துள்ள பால்கு நதிக்கரையில் 'பிண்ட தானம்' வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பீகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்தர் குமார் சிங் இந்நிகழ்ச்சியை நடத்தினார்.
பீகார் நகரில் புகழ்பெற்ற விஷ்ணுபாத் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தேவ்காட்டில் இதற்கான பிரார்த்தனையை சந்தன் குமார் சிங் செய்தார். சடங்குகளை பாபு சுரேஷ் நாராயண் நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.
ஏற்கெனவே ஒருமுறை குஜராத்தின் சூரத் பயிற்சி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 22 பேருக்கு சந்தன் குமார் சிங், 'பிண்ட தானம்' வழங்கியுள்ளார்.
இதுகுறித்து சந்தன் குமார் சிங் கூறியதாவது:
"எனது தந்தை இந்த பாரம்பரியச் சடங்கை கடந்த 13 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார், அவரது மறைவுக்குப் பிறகு நான் அதை முன்னெடுத்து வருகிறேன். முழு உலகமும் நமக்கு சொந்தமானது. இந்த பூவுலகைவிட்டு வெளியேறிய அந்த ஆத்மாக்களுக்கு 'பிண்ட தானம்' வழங்குவதை விட பெரிய செயல் என்னவாக இருக்கும்!"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.