

புனே
காஷ்மீர் மக்களுக்கு கருத்து, பேச்சு சுதந்திரம் இல்லை எனக் கூறி ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த கேரளாவைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதனுக்கு புனேயில் உள்ள பல்கலைக்கழக நூலகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
கேரளவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கண்ணன் கோபிநாதன். 2012-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வாகினார். 2018-ம் ஆண்டு கேரளாவில் வெள்ளம் வந்தபோது, தன்னுடைய அடையாளத்தை மறைத்து, தான் யார் என்பதை வெளிக்காட்டாமல் நிவாரண முகாமில் ஒரு மாதம் பணியாற்றினார் கண்ணன். அதன்பின்புதான் இவர் ஐஏஎஸ் அதிகாரி என்பதே அனைவருக்கும் தெரிந்தது. அதன்பின் நிவாரணமாக ரூ.1 கோடி வழங்கினார் கண்ணன்.
காஷ்மீர் மாநிலத்தில் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதையும், அடிப்படை உரிமைகள் பறிபோகின்றன என்றும் கண்ணன் சுட்டிக்காட்டி கடந்த மாதம் 5-ம் தேதி தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், சாவித்ரி புலே புனே பல்கலைக்கழகத்தில் உள்ள ஜெயகர் அறிவுசார் வள மையம் நூலகத்தில் மாணவர்கள் அழைப்பின் பெயரில் பேசுவதற்காக கண்ணன் அங்கு சென்றுள்ளார்.
ஆனால், புனே நூலக அதிகாரி, குறிப்பிட்ட சில விதிகளை நூலகம் பின்பற்றி வருவதால் விண்ணப்பம் எழுதிக்கொடுத்து அது பரிசீலிக்கப்பட்டு அதன்பின் அனுமதிக்கப்படும் என கண்ணன் கோபிநாதனிடம் தெரிவி்த்தார். இதனால் அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
இதுகுறித்து கண்ணன் கோபிநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், "புனே பல்கலைக்கழக மாணவர்கள் ஜெயகர் நூலகத்தில் யுபிஎஸ்சி தேர்வு தொடர்பாக கலந்துரையாட திங்கள்கிழமை அழைத்திருந்தார்கள். நானும் அவர்களைச் சந்திக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால், நான் யார் என்பதை அறிந்த நூலகர், என்னை விண்ணப்பம் எழுதிக் கொடுத்து அது பரிசீலிக்கப்பட்டு முடிவு வந்தபின் அனுமதிக்கிறேன் எனத் தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்
மற்றொரு ட்வீட்டில், "எந்தவிதமான அரசியல் நிகழ்வோ, அரசுக்கு எதிராகவோ பல்கலைக்கழகத்திலோ அல்லது விடுதியிலோ நடக்காது. விதிமுறைப்படிதான் நடந்து கொள்வோம் என மாணவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அங்கிருந்து என்னை அனுப்பியது நல்லவிதமாக உணரவில்லை. ஆனால் இது புதிய அனுபவம். மீண்டும் புனே வருவேன். உங்களைச் சந்திக்கிறேன" எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கண்ணன் கோபிநாதன் பிடிஐ நிருபருக்கு அளித்த பேட்டியில், "ஏராளமான மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வருகிறார்கள். பல்கலைக்கழக நூலகத்தில் பேசினால் உதவியாக இருக்கும் என மாணவர்கள் அழைத்ததால் அங்கு சென்றேன். என்னுடன் பேசுவதை மாணவர்கள் விரும்புகிறார்கள் என்று கூறியும் அனுமதிக்கவில்லை.
திங்கள்கிழமை நூலகரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, நூலகத்தில் மாணவர்கள் ஆசைப்படி சில மணிநேரம் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரினேன். ஆனால், நூலகர் என்னை அறிந்துகொண்டு, விண்ணப்பம் எழுதிக்கொடுங்கள். அதைப் பரிசீலித்தபின் அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். நூலகருக்கும், மாணவர்களுக்கும் இடையே அனல் பறக்கும் வாதம் நடந்ததால், நான் என்னுடைய திட்டத்தை மாற்றிக்கொண்டேன். அதன்பின், கேண்டீனில் மாணவர்களுடன் பேசிவிட்டு அங்கிருந்து சென்றேன்" எனத் தெரிவித்தார்.
பிடிஐ