

ஹைதராபாத்
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ட்ரம்புக்கு ஆதரவாக பேசியது தவறு என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.
ஐ.நா. கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவுக்கு 7 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதல் நிகழ்ச்சியாக ஹூஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் சார்பில் ஹவுடி மோடி நிகழ்ச்சி நடந்தது.
ஹூஸ்டன் நகரின் என்ஆர்ஜி அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப்பும், பிரதமர் மோடியும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகையில், ‘‘2020-ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் அதிபர் ட்ரம்ப்பையே மீண்டும் மக்கள் அதிபராகத் தேர்வு செய்ய வேண்டும்’’ என்று மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
பிரதமர் மோடி, இந்தியில் " ஆப்கி பார், ட்ரம்ப் சர்க்கார்" (இந்த முறையும் ட்ரம்ப் அரசுதான்) என்று முழுக்கமிட்டு மக்களிடம் ஆதரவு கோரினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.
இந்திய பிரதமர் என்பதை மறந்து மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் பேசியது கண்டிக்கதக்கது என காங்கிரஸ் கட்சி விமர்சித்து இருந்தது.
இந்தநிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் மோடியும், ட்ரம்பும் காதலர்கள் போல் கைகுலுக்கிக் கொண்டனர். பிரதமர் மோடியிடம் நான் கூறவிரும்புவது என்னவென்றால், ட்ரம்புடனான நட்புறவை நீங்கள் சமநிலையுடன் தான் பின்பற்ற வேண்டும். ஒருவேளை அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் தோல்வியடைந்து விட்டால் என்னாகும் என்பது கடவுளுக்கு தான் தெரியும்.
ட்ரம்ப் தந்திரக்காரர், ஏமாற்ற தெரிந்தவர். நட்புறவு கொள்ள தகுதியான நபர் அல்ல. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தால் அவரை பாராட்டுவார். பாகிஸ்தானை துதிபாடுவார்.
பிரதமர் மோடி 2024-ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று விடுவார் என எதிர்பார்க்கலாம். அதன் பிறகு அவர் சந்திரனுக்கு தான் செல்ல வேண்டும். உள்நாட்டில் உற்பத்தி செய்வோம் என்கிறார்.
ஆனால் அமெரிக்க நிறுவனத்தில், அதுவும் ட்ரம்ப் நிதி உதவி செய்யும் நிறுவத்தில் மத்திய அரசு முதலீடு செய்கிறது.
இவ்வாறு ஒவைசி கூறினார்.