சியாச்சின் பனிமலையில் 130 டன் கழிவுகளை அகற்றிய இந்திய ராணுவ வீரர்கள்

சியாச்சின் பனிமலையில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் : படம் ஏஎன்ஐ
சியாச்சின் பனிமலையில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் : படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

புதுடெல்லி

உலகின் மிகவும் ஆபத்தான போர்க்களம் என்று கருதப்படும் சியாச்சின் பனிமலையில் இயற்கையைக் காக்கும் முயற்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மொத்தம் 130 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் கராக்குரம் மலைப்பகுதியில் சியாச்சின் பனிமலை அமைந்துள்ளது. இங்கு 19 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய ராணுவ முகாம் உள்ளது. சர்வதேச அளவில் மிகவும் ஆபத்தான போர்க்களமாக கருதப்படுகிறது சியாச்சின் பனிமலை.

சியாச்சின் பனிமலை பகுதியில் குப்பைகள், கழிவுகள் குவிந்து கிடப்பதால் சுற்றுப்புறச் சூழலுக்கு பெரும் ஆபத்து உருவாகும் நிலை ஏற்பட்டது. சுமார் 236 டன் அளவுக்கு அந்தப் பகுதியில் கழிவுகள் கொட்டிக் கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இதனையடுத்து இந்திய ராணுவம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கியது.

இதுவரை சியாச்சின் பனிமலையில் 130 டன்கள் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அதில், 48.41 டன் பயோ-வேஸ்ட், 40.32 டன் மறு சுழற்சிக்கு ஆகாத கழிவுகளும், 41.45 டன் சிதைக்க முடியாத உலோகக் கழிவுகளும் அடங்கும் என ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதவிர, உலோகம் அல்லாத கழிவுகளை உரமாக மாற்றுவற்காக சியாச்சின் அடிப்படை முகாமுக்கு அருகில் உள்ள பார்த்தாபூர் மற்றும் லேவில் உள்ள புக்தாங் பகுதியில் சிறு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ முகாம் வந்ததைத் தொடர்ந்து இதுவரை 163 வீரர்களை இழந்துள்ளது.

சியாச்சின் மலைப்பகுதியைக் காக்கவும், இயற்கை சூழல் மாறுபடாமல் தடுக்கும் வகையில் மக்களிடம் வழிப்புணர்வு பிரச்சாரத்தை ராணுவம் தொடங்கியுள்ளது.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in