

புதுடெல்லி,
உத்தரப் பிரதேச அரசு விவசாயிகளின் நலன் குறித்து விளம்பரப் பலகைகளில் மட்டுமே தங்கள் அக்கறையை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால், நடைமுறையில் எதுவும் செய்யாமல் தொடர்ந்து விவசாயிகள் அவமதிக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள் என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ட்விட்டரில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில், "உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, விவசாயிகள் மீது மிகவும் அக்கறையுள்ளவர்கள் போல விளம்பரங்களிலும் விளம்பரப் பலகைகளில் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள்.
ஆனால், இந்த நிமிடம் வரை விவசாயிகள் தங்கள் நிலுவைத் தொகையைப் பெறவில்லை என்பதுதான் உண்மை. விவசாயிகளுக்கு அங்கு முறையான மின்சாரம் கிடைப்பதில்லை, ஆனால் மின்சாரக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
விவசாயிகள் கடன் தள்ளுபடி என்ற பெயரில் ஏமாற்றப்படுகிறார்கள். உ.பி. அரசால் அவர்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.