

புதுடெல்லி
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி ஊழல் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.
இவர்கள் இருவர் உள்பட மொத்தம் 75 பேர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தின் கீழ் கிரிமினல் வழக்கை அமலாக்கப் பிரிவினர் பதிவு செய்துள்ளனர். விரைவில் அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்கும் எனத் தெரிகிறது.
மும்பை போலீஸார் மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி ஊழல் தொடர்பாக 70-க்கும் மேற்பட்டோர் மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து அமலாக்கப் பிரிவினரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வரும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்த சூழலில் சரத்பவார் மீது அமலாக்கப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை மகாராஷ்டிரா மாநில கூட்டறவு வங்கியில் தலைவர்களாக இருந்தவர்கள், உறுப்பினர்களால் அரசுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் சுரேந்திர அரோரோ மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எஸ்ஸி தர்மாதிகாரி, எஸ்.கே.ஷின்டே ஆகியோர் வழக்கில் குறிப்பிடத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதால், மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் சரத் பவார், அஜித் பவார், திலிப்ராவ் தேஷ்முக், இஸ்ஹார்லால் ஜெயின், ஜெயந்த் பாட்டீல், சிவாஜி ராவ், ஆனந்த் ராவ், ராஜேந்திர சிங்கானே, மதன் பாட்டீல் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், 2001- முதல் 2007-ம் ஆண்டுவரை முதல்வராக இருந்தவர்கள், துணை முதல்வர்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், வங்கியின் இயக்குநர்கள், மூத்த அதிகாரிகள், கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் ஆகியோரின் பெயர்களும் முதல்தகவல் அறிக்கையில் இடம் பெற்றன.
மும்பை போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள், அடிப்படையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் சரத் பவார் மற்றும் அஜித் பவார் மீது வழக்குப்பதிவு செய்தனர்
இதுகுறித்து சரத் பவாரிடம் இன்று நிருபர்கள் கேட்டபோது, "என் மீது அமலாக்கப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் சிறைக்குச் சென்றாலும் பரவாயில்லை. என்னை சிறைக்கு அனுப்புங்கள். நான் இன்னும் சிறை அனுபவம் பெற்றதில்லை. யாரேனும் என்னைச் சிறைக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தால், அதை நான் வரவேற்கிறேன்.
நான் இந்த வங்கியில் உறுப்பினராகவும், முடிவு எடுக்கும் இடத்திலும் இல்லை என்ற நிலையில் என்னுடைய பெயரை இந்த வழக்கில் சேர்த்தமைக்காக அமலாக்கப் பிரிவுக்கு நன்றி தெரிவி்க்கிறேன்" என்றார்.
பிடிஐ