

ஷாஜகான்பூர்
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சின்மயனாந்த் மீது பலாத்காரப் புகார் அளித்த சட்டக்கல்லூரி மாணவி பணம் பறித்தல் புகாரில் இன்று காலை சிறப்பு விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் (வயது 72). இவர் மீது உத்தரப் பிரதேசம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் 27-ம் தேதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
புகார் அளித்த மாணவி திடீரென காணாமல் போனதையடுத்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்தப் பெண் அளித்த புகாரை விசாரிக்க தனி சிறப்புக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. சிறப்புக் குழுவின் விசாரணயை அலகாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு சட்டக்கல்லூரி மாணவியிடமும், மாணவர்களிடமும் விசாரணை நடத்தி கடந்த 20-ம் தேதி பாஜக தலைவர் சின்மயனாந்தைக் கைது செய்தது. அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இந்நிலையில் ஜாமீன் கோரி, ஷாஜஹான்பூர் தலைமை ஜூடிசியல் நீதிமன்றத்தில் சின்மயானந்த் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து, செசன்ஸ் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டார்.
இதற்கிடையே பலாத்காரப் புகார் அளித்த சட்டக்கல்லூரி மாணவி தனது பலாத்காரத்தை வைத்து மிரட்டி சின்மயானந்திடம் பணம் பறித்தார் எனும் புகார் சிறப்பு விசாரணைக் குழுவிடம் வழங்கப்பட்டு இருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் சட்டக்கல்லூரி மாணவியைக் கைது செய்ய சிறப்பு விசாரணைக் குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர்.
ஆனால், சட்டக்கல்லூரி மாணவி, முன்ஜாமீன் கோரி ஷாஜகான்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே அந்த சட்டக்கல்லூரி மாணவியை விசாரணைக்கு அழைத்த சிறப்பு விசாரணைக் குழுவினர் அவரிடம் நீண்டநேரம் விசாரணை நடத்தினார்கள். இந்த சூழலில் இன்று காலை சட்டக்கல்லூரி மாணவியை பணம் பறித்தல் புகாரில் சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்தனர்.
சிறப்பு விசாரணைக் குழு இன்று காலை 9.15 மணிக்கு சட்டக்கல்லூரி மாணவியின் இல்லத்துக்குச் சென்று அவரைக் கைது செய்தது. அவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அந்த சட்டக்கல்லூரி மாணவியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, சட்டக்கல்லூரி மாணவி ஷாஜகான்பூர் மாவட்ட சிறையில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டார்.
பலாத்காரப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக தலைவர் சின்மயானந்த் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சட்டக்கல்லூரி மாணவி பலாத்காரப் புகாரைச் சுட்டிக்காட்டி பணம் பறிக்க முயன்றதாக சின்மயனாந்த் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் 3 மாணவர்களையும் சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சச்சின் செங்கர், விக்ரம், சஞ்சய் ஆகிய 3 பேரிடம் சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்தி அவர்கள் பயன்படுத்திய செல்போன், பணப் பரிமாற்றத்துக்கான செல்போன் ஆகியவற்றைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே சின்மயனாந்த் மீது பலாத்காரப் புகார் வழங்கப்பட்டுள்ள நிலையில், போலீஸார் அவர் மீது பலாத்கார வழக்கு பதியவில்லை. ஐபிசி 376சி பிரிவு அதாவது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு பெண்ணை பாலியல் இச்சைக்கு பயன்படுத்துதல் என்று பதிவு செய்துள்ளார்கள். ஆனால், பலாத்காரக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்யவில்லை.
பலாத்காரக் குற்றத்துக்கான 376 பிரிவைக் காட்டிலும், 376சி பிரிவு என்பது வீரியம் குறைவானது. பலாத்காரம் குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் சிறை விதிக்கப்படும். ஆனால், 376சி பிரிவில் 5 முதல் 10ஆண்டு சிறை மட்டுமே விதிக்கப்படும்.
பிடிஐ