Published : 24 Sep 2019 02:47 PM
Last Updated : 24 Sep 2019 02:47 PM

பாஜக கொடுத்த வாக்கை காப்பாற்றாவிட்டால் சுயபரிசோதனை அவசியம்: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து

சிவசேனா மூத்ததலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான சஞ்சய் ராவத் : கோப்புப்படம்

மும்பை

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கும் விஷயத்தில் பாஜக கொடுத்த வாக்கைக் காப்பாற்றாவிட்டால், அந்தக் கட்சி சுயபரிசோதனை செய்வது அவசியம் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் வரும் அக்டோபர் 21-ம் தேதியும், வாக்குப்பதிவு 24-ம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதையடுத்து பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது.

ஆனால், மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் சிவேசேனா, பாஜக இடையேதான் இன்னும் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, இரு கட்சிகளும் செய்துகொண்ட உடன்பாட்டின்படி, இரு கட்சிகளும் தலா 135 தொகுதிகளிலும், மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கும் பிரிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், சிவசேனா கட்சியைக் காட்டிலும் அதிகமான தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால்தான், தொகுதி உடன்பாட்டில் இன்னும் இரு கட்சிகளுக்கு இடையே சமரசம் எட்டவில்லை. இதனால், கடந்த 2014-ம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நிலைமை போல் இரு கட்சிகளும் கடைசி நேரத்தில் தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''எங்கள் கட்சி எப்போதும் சாதகமான, நேர்மறையான எண்ணத்துடனே இருக்கிறது. கூட்டணி தேவை என்றுதான் எண்ணுகிறோம். மக்களவைத் தேர்தலுக்கு முன்பே, சட்டப்பேரவை தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்யப்பட்டுவிட்டது. கொடுத்த வாக்குறுதியின் கவுரவத்தை பாஜக காப்பாற்றாவிட்டால், அந்தக் கட்சி தங்களை சுயபரிசோதனை செய்வது அவசியம்

மகாராஷ்டிரா மண் சிவாஜி மகாரா வாழ்ந்தது. இங்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது முக்கியம். பாஜக தலைவர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய், பிரமோத் மகாஜன், எல்.கே.அத்வானி போன்ற தலைவர்களுடன் நாங்கள் பணியாற்றி இருக்கிறோம். அவர்கள் எப்போதும் கொடுத்த வாக்கிற்கு மதிப்பு அளித்தார்கள்" எனத் தெரிவித்தார்.

கடந்த 2014- ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாட்டில் சமரசம் எட்டாமல் தனித்தனியாகப் போட்டியிட்டன. இதில் பாஜக 122 இடங்களிலும், சிவேசனா 63 இடங்களிலும் வென்றன. சில மாதங்களுக்குப் பின் அமைச்சரவையில் சிவசேனா சேர்ந்துகொண்டது நினைவுகூரத்தக்கது.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x