ஹவுடி மோடியை நிகழ்ச்சியை புகழ்ந்த மிலிந்த் தியோரா; நன்றி சொன்ன பிரதமர் மோடி: காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தி

மிலிந்த் தியோரா
மிலிந்த் தியோரா
Updated on
1 min read

மும்பை

பிரதமர் மோடி அமெரிக்காவில் பங்கேற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியை காங்கிரஸ் மூத்த தலைவர் மிலிந்த் தியோரா புகழ்ந்தது கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா. கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவுக்கு 7 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதல் நிகழ்ச்சியாக ஹூஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் சார்பில் ஹவுடி மோடி நிகழ்ச்சி நடந்தது.

ஹூஸ்டன் நகரின் என்ஆர்ஜி அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப்பும், பிரதமர் மோடியும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகையில், ‘‘2020-ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் அதிபர் ட்ரம்ப்பையே மீண்டும் மக்கள் அதிபராகத் தேர்வு செய்ய வேண்டும்’’ என்று மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

பிரதமர் மோடி, இந்தியில் " ஆப்கி பார், ட்ரம்ப் சர்க்கார்" (இந்த முறையும் ட்ரம்ப் அரசுதான்) என்று முழுக்கமிட்டு மக்களிடம் ஆதரவு கோரினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.

இந்திய பிரதமர் என்பதை மறந்து மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் பேசியது கண்டிக்கதக்கது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறினார். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர் மிலிந்த் தியோரா பிரதமர் மோடியை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டினார்.

பிரதமர் மோடியின் அமெரிக்க உரை ராஜதந்திர நடவடிக்கை. இந்திய, அமெரிக்க உறவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர் எனது தந்தை முரளி தியோரா. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உபசரிப்பும், இந்திய அமெரிக்கர்களின் அங்கீகாரமும் நம்மை பெருமை கொள்ள செய்கிறது. இந்தியாவின் 21-ம் நூற்றாண்டு தலைமையை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது’’ எனக் கூறினார்.

இதற்கு பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடியை மிலிந்த் தியோரா புகழ்ந்தது காங்கிரஸ் தலைமைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் அதிகாரபூர்வமாக பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை விமர்சித்துள்ள நிலையில் அதற்கு நேர் மாறாக மிலிந்த் தியோரா பேசி இருப்பது கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவராக இருந்த மிலிந்த் தியோராவுக்கும், சஞ்சய் நிருபத்துக்கும் இடையே மோதல் நடந்தது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மும்பையில் பெரும் தோல்வியடைய காரணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து மிலிந்த் தியோரா பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in