Published : 24 Sep 2019 11:46 AM
Last Updated : 24 Sep 2019 11:46 AM

ஒரு தவறுக்கு அமைச்சரை மட்டும் குறை கூறினால் அரசு நிர்வாகமே குலைந்துவிடும்: ப.சிதம்பரத்துக்கு ஆதரவு தெரிவித்த மன்மோகன் சிங்

புதுடெல்லி,

ஒரு தவறுக்கு அமைச்சரை மட்டும் குறைகூறினால் அரசின் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பே குலைந்துவிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு ஆதாரவாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ காவல் முடிந்த நிலையில், தற்போது நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அக்டோபர் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

எந்த அரசியல்வாதியையும் இதுவரை திஹார் சிறையில் சந்திக்காத காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முதல் முறையாக சிதம்பரத்தை நேற்று சென்று சந்தித்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பின் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) ஒப்புதல் வழங்கியது என்பது ஒட்டுமொத்தமாக துறை சார்ந்த முடிவு. அந்த ஒப்புதல் வழங்கியதற்கு அந்தத் துறையின் அமைச்சர்தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

நம்முடைய நிர்வாக அமைப்பில் எந்தவிதமான முடிவும் எந்த தனிமனிதரும் தன்னிச்சையாக எடுக்க முடியாது. அனைத்து முடிவுகளும் ஒட்டுமொத்தமாக கலந்து பேசி எடுப்ப்பதுதான். அது ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கியதில் அப்போது நிதியமைச்சகத்துக்கு உட்பட்ட அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தில் 6 செயலாளர்கள் இருந்தார்கள். அவர்கள் ஆய்வு செய்து அளித்த ஒருமித்த பரிந்துரையின் அடிப்படையில்தான் ப.சிதம்பரம் அதற்கு ஒப்புதல் அளித்தார்.

அதிகாரிகள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், பரிந்துரைக்கு மட்டும் ஒப்புதல் அளித்த ஒரு அமைச்சர் எப்படி குற்றத்தை செய்தார் என்று புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது.

தவறுக்கு ஒரு அமைச்சர்தான் பொறுப்பு என்றால், நமது அரசாங்க அமைப்பின் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பும் குலைந்துவிடும்.

முன்னாள் நிதியமைச்சரும், என்னுடைய நண்பருமான ப.சிதம்பரம் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது எனக்கு கவலையளிக்கிறது. எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை இருக்கிறது. சிதம்பரத்துக்கு நீதிமன்றம் உரிய நீதிவழங்கும் என்று நம்புகிறேன்’’.

இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x