Last Updated : 10 Jul, 2015 09:14 AM

 

Published : 10 Jul 2015 09:14 AM
Last Updated : 10 Jul 2015 09:14 AM

பிஹார் மருத்துவ கல்லூரிகளில் ம.பி. போலீஸ் விசாரணை: வியாபம் ஊழலில் தொடர்பு இருப்பதாக புகார்

வியாபம் ஊழலில் பிஹாரின் மருத்துவக் கல்லூரி மாணவர் களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்தியப் பிரதேச மாநில சிறப்பு அதிரடிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தியப் பிரதேச மாநில கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஷிஷ் கேரே தலைமையில் சிறப்பு அதிரடிப்படையினர் சில நாட்களாக பிஹாரில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் பிஹார் மாநிலத்தின் சில மருத்துவக் கல்லூரிகளில் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்னா, நாளந்தா, முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் மத்தியப் பிரதேச போலீஸாருக்கு பிஹார் மாநில போலீஸாரும் உதவி வருகிறார்கள். நாளந்தா, ரோஹத்தாஸ் மற்றும் சமஸ்திபூரை சேர்ந்த குறிப்பிட்ட நான்கு மாணவர்களை தேடி சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களை பிடித்து கொடுப்பவருக்கு மத்தியப் பிரதேச போலீஸாரால் ஏற்கனவே ரொக்க பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து `தி இந்து’விடம் பிஹார் மாநில போலீஸ் வட்டாரம் கூறியதாவது: `வியாபம் நடத்திய தேர்வுகளில் `முன்னாபாய் எம்பிபிஎஸ்’ (தமிழில் `வசூல் ராஜா எம்பிபிஎஸ்’) திரைப்படத்தில் இடம் பெறும் காட்சியைபோல, மத்தியப் பிரதேச மாணவர்களுக்காக பிஹார் மாணவர்கள் ஆஜராகி தேர்வு எழுதியுள்ளனர். மத்தியப் பிரதேச மருத்துவக் கல்லூரிகளின் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு நுழைவுத் தேர்வுகளில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. ஒரு மாணவருக்கு ரூ.5 லட்சம் வரை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குறிப்பிட்ட நான்கு மாணவர்களும் செய்துள்ளனர்’ எனத் தெரிவித்தன.

வியாபம் எனப்படும் மத்தியப் பிரதேச அரசின் தொழில் தேர்வு வாரியத்தில் நடந்த ஊழல் சமீப காலமாக விசுவரூபம் எடுத்து வரு கிறது. அம் மாநிலத்தின் மருத்துவ நுழைவுத் தேர்வுகளிலும் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக, அதன் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளின் 200 நுழைவுத்தேர்வு விடைத்தாள்களை எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் 32 மாணவர்கள் ஊழல் செய்து இடம் பெற்றிருப்பது உறுதியாகி உள்ளது. தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் மேலும் பல மாணவர்கள் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x