

புதுடெல்லி
உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதன்மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதி களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள வழக்குகளின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த போது, உறுப்பினர் களின் கேள்விகளுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்திருந்தார். அதில், உச்ச நீதிமன்றத்தில் 59 ஆயிரத்து 331 வழக்குகள் நிலுவை யில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட் டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவற்றை விசாரித்து முடிக்க போதிய எண்ணிக்கையில் நீதிபதி கள் இல்லை. எனவே, உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக் கையை உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கடிதம் எழுதியிருந்தார்.
அதன்பின் நீதிபதிகள் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற கொலீஜியம், சிலருடைய பெயர்களை கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. அவர்களில் 4 நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசு தேர்வு செய்து உச்ச நீதிமன்ற நீதிபதி களாக நியமிக்க கடந்த வாரம் புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
அதன்படி பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷண் முராரி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்திர பட், இமாச்சல் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசுப்ரமணியன் (இவர் சென்னையைச் சேர்ந்தவர்), கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகிய 4 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
நான்கு பேருக்கும் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சி உச்ச நீதிமன்ற அறை எண் 1-ல் மிக எளிமையாக நேற்று நடைபெற்றது. நான்கு நீதிபதிகள் பதவியேற்ற பின், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தலைமை நீதிபதி உட்பட 34 ஆக உயர்ந்துள்ளது. - பிடிஐ