

காஸியாபாத்
பிரிட்டிஷ் காலத்தில் வாட்ச்மேனாகப் பணிபுரியத் தொடங்கி ஏழ்மையின் காரணமாக இன்னமும் வாட்ச்மேன் பணியை விடமுடியாதவராக இருக்கிறார் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 91 வயது பெரியவர்.
பிரிட்டிஷ் காலத்தில் வாட்ச்மேனாகப் பணியில் இணைந்தவர் திவான் சிங். லோனி நகரில் உள்ள துர்காவாலா என்ற கிராமத்தில் வசித்து வரும் இந்த 91 வயது முதியவர் இப்போதும் வேலைக்குச் சென்று வருகிறார் என்பது கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கை மிகவும் கசப்பான ஒன்று.
அரசு வேலையை விட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், அவருக்கு அன்றாடக் கூலிகளான இரண்டு பிள்ளைகள் இருந்தும் தனது வாழ்க்கைக்காக தானே உழைத்து சாப்பிடும் நிலையில்தான் அவர் இருக்கிறார்.
இதுகுறித்து திவான் சிங், இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நான் 1944-ம் ஆண்டிலிருந்து வாட்ச்மேனாகப் பணியாற்றி வருகிறேன். ஆனால் நான் இப்போது வேலை பார்க்கும் வேலையைப் போன்றதல்ல அது. தற்போது நான் பார்க்கும் வாட்ச்மேன் வேலையின் மூலம் மாதம் ரூ.2,500 கிடைக்கிறது.
நான் அரசாங்கத்தால் முறையாக ஓய்வுபெறவில்லை என்பதால் ஓய்வூதியம் பெறும் தகுதி அற்றவனாக இருக்கிறேன். ஆனால் இந்த வயதிலும் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது சற்று சிரமமாகவே உள்ளது. அரசாங்கம் எனக்கு ஏதாவது நிதி உதவி செய்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும்'' என்று தெரிவித்தார்.