

புதுடெல்லி
இந்திய பிரதமர் என்பதை மறந்து மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் பேசியது கண்டிக்கதக்கது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
ஐ.நா. கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவுக்கு 7 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதல் நிகழ்ச்சியாக ஹூஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் சார்பில் ஹவுடி மோடி நிகழ்ச்சி நடந்தது.
ஹூஸ்டன் நகரின் என்ஆர்ஜி அரங்கில் நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப்பும், பிரதமர் மோடியும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகையில், ‘‘2020-ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் அதிபர் ட்ரம்ப்பையே மீண்டும் மக்கள் அதிபராகத் தேர்வு செய்ய வேண்டும்’’ என்று மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
பிரதமர் மோடி, இந்தியில் " ஆப்கி பார், ட்ரம்ப் சர்க்கார்" (இந்த முறையும் ட்ரம்ப் அரசுதான்) என்று முழுக்கமிட்டு மக்களிடம் ஆதரவு கோரினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு என்பது எப்போதுமே கட்சி சார்புக்கு அப்பாற்பட்டது. ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே பேசிய மோடி அதிபர் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் குடியரசு கட்சியினர், ஜனநாயக கட்சியினர் என தனிப்பட்ட கட்சிகள் சார்பாக இந்தியா என்ற நிலைப்பாட்டையும் எடுத்தது இல்லை. அவருக்கு பிரச்சாரம் செய்ய முனைந்துள்ளார்.
இது இந்திய - அமெரிக்க உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும். அமெரிக்காவின் உள்நாட்டு தேர்தல் விவகாரங்களில் தலையிடுவது நமது நாட்டின் வெளியுறவு கொள்கைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்தியா மற்றும் அமெரிக்கா இருநாடுகளும் இறையாண்மை உள்ள ஜனநாயக நாடுகள் என்பதை மறந்து பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் இருக்கும்போது நீங்கள் இந்திய பிரதமர் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் நட்சத்திர பிரசாரகர் அல்ல’’ எனக் கூறியுள்ளார்.