Published : 23 Sep 2019 02:44 PM
Last Updated : 23 Sep 2019 02:44 PM

பசுக்களைக் கொன்றதாக வலைவீசி தேடப்பட்டவரை சுட்டுப் பிடித்த உ.பி. போலீஸ்

ராம்பூர்,

உத்தரப் பிரதேசத்தில் பசுக்களைக் கொன்றதாக பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரை உத்தரப் பிரதேச காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுப் பிடித்தனர்.

நேற்றிரவு தனகாணி ராம்பூர் அருகே போலீஸார் வழக்கமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியே சென்ற சில சந்தேகத்திற்கிடமான நபர்களை பரிசோதனை செய்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த நபர்கள் போலீஸார் சோதனை செய்வதைப் பார்த்து தப்பிச் சென்றனர். அவர்களை துரத்திச் சென்ற காவல் துறையினர் மீது அந்நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் சுடப்பட்ட நபர் தவிர மற்றவர்கள் தப்பிச் சென்றனர். குண்டடிப்பட்டு விழுந்தவர் அரை டஜனுக்கும் மேலான பசுக்கொலைகள் வழக்குகளில் சிக்கி போலீஸாரால் தொடர்ந்து தேடப்பட்டு வரும் இம்ரான் ஜம்மான் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். தலைமறைவாக இருந்துவந்த அந்நபரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய உதவி காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் சிங் கூறியதாவது:

''தனகாணி ராம்பூர் அருகே கேசர்பூர் மற்றும் நாங்கரை இணைக்கும் சாலையில் நேற்றிரவு வழக்கமான சோதனையில் ஈடுபட்டு வந்தோம். அப்போது பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் திடீரென போலீஸைப் பார்த்ததும் தப்பித்து ஓடத் தொடங்கினர். காவல்துறையினர் அவர்களைத் துரத்தினர்,

பின்தொடர்ந்து காவல்துறையினரை நோக்கி அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். எங்களின் பதிலடி துப்பாக்கிச் சூட்டில் இம்ரான் பிடிபட்டார். ஆனால் அவரது கூட்டாளி தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட இம்ரான் ஏற்கெனவே பசுக்களைக் கொன்ற பல வழக்குகளில் தொடர்ந்து தேடப்பட்டு வருபவர். அவரிடமிருந்து ஒரு 12 துளை துப்பாக்கி ஒன்றும் மற்றும் பயன்படுத்தாத இரு தோட்டாக்களும் மீட்கப்பட்டன''.

இவ்வாறு அருண்குமார் சிங் தெரிவித்தார்.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இம்ரான், மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அதன் பிறகு என்கவுன்ட்டரின்போது அவருக்கு ஏற்பட்ட பலமான காயங்களுக்கு மேலதிக சிகிச்சை அளிப்பதற்காக மீரட்டில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x