Published : 23 Sep 2019 12:56 PM
Last Updated : 23 Sep 2019 12:56 PM

அரை நூற்றாண்டுக்குப்பின் புதிய எம்எல்ஏவுக்காக இன்று தேர்தல்: கேரளாவின் பாலா சட்டப்பேரவை ஒரு பார்வை

கோட்டயம்

கேரளாவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரே எம்எல்ஏவைப் பார்த்துவந்த பாலா சட்டப்பேரவைத் தொகுதி மக்கள், 2-வது எம்ஏல்ஏவுக்காக இன்று வாக்களித்து வருகின்றனர்.

கேரளாவின் கோட்டயம் மக்களவைத் தொகுதிகளுக்குள் ஒன்று பாலா சட்டப்பேரவைத் தொகுதி (முந்தைய பெயர் பாலை). கோட்டயம் மாவட்டத்துக்குள் பாலா சட்டப்பேரவைத் தொகுதி அடங்கி இருக்கிறது.

கடந்த 1967-ம்ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டுவரை இந்த பாலா சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் ஆதர்ஷ எம்எல்ஏவாக, நாயகனாக இருந்தவர் கே.எம்.மாணி. கேரள மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சராக இருந்தவர்.

ஒருநேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடர் வெற்றிகளைப் பெற்றுவந்த கே.எம்.மாணி, காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கட்சியில் இருந்து விலகினார். அதன்பின் கேரள காங்கிரஸ் (மாணி) என்ற புதிய கட்சியைத் தொடங்கி அதில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்றார்.

கேரள காங்கிரஸ் மாணி கட்சியின் தலைவர் கே.எம். மாணி(படவிளக்கம்)

ஏறக்குறைய 1967-ம் ஆண்டிலிருந்து பாலா தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 2019-ம் ஆண்டுவரை கே.எம்.மாணி இந்தத் தொகுதியில் வென்று வருகிறார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தனது 88 வயதில் மாணி காலமானார்.

52 ஆண்டுகளாக பாலா தொகுதியையும், தொகுதி மக்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அவர்களின் நன்மதிப்பைப் பெற்று இந்தத் தொகுதியில் வென்று வந்தவர் கே.எம்.மாணி என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எம்.மாணி உயிருடன் இருக்கும் வரை எந்தக் கட்சியினரும் இங்கு வெற்றி பெறுவது என்பது இயலாத செயலாக இருந்தது. ஆதலால், காங்கிரஸ் கட்சியாகட்டும், இடதுசாரியாகட்டும் பாலா தொகுதியில் மாணியை வெல்வது என்பது கடினமாவே இருந்து வந்தது.

கே.எம். மாணி மறைவுக்குப் பின் 54 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய எம்எல்ஏவைத் தேர்வு செய்ய இன்று பாலா சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் நடந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 24 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் மாணி சி கப்பன், கேரள காங்கிரஸ் சார்பில் மாணியின் நெருங்கிய நண்பர், ஜோஸ் டாம் புலிக்குன்னல், பாஜக சார்பில் கோட்டயம் மாவட்டத் தலைவர் என்.ஹாரிஸ் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக இருக்கின்றனர்.

வரும் 21-ம் தேதி கேரளாவில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் இந்தத் தொகுதியில் பெறும் வெற்றி, இடைத்தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால், அனைத்துக் கட்சிகளும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன. இந்த பாலா தொகுதியில் 1.79 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பாலா தொகுதியில் பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். சுற்றிலும் நீரோடை, அழகான இயற்கை பகுதிகள் நிறைந்தது பாலா சட்டப்பேரவைத் தொகுதியாகும்.

இங்கு மிகவும் புகழ்பெற்ற புனித தாமஸ் கல்லூரி, அல்போன்ஸா கல்லூரி, ஜோஸப் பொறியியல் கல்லூரி, தாமஸ் பிஎட் கல்லூரிகள் கேரள மாநிலத்தில் புகழ்பெற்றவை.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x