Published : 23 Sep 2019 12:39 PM
Last Updated : 23 Sep 2019 12:39 PM

ஊடுருவ தயாராகும் தீவிரவாதிகள்; பாலக்கோட் போன்று மீண்டும் பதிலடி? - பிபின் ராவத் தகவல்

சென்னை

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து 500 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ தயாராக உள்ளனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் கூறினார்.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இளம் அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி பிரிவை தலைமைத் தளபதி பிபின் ராவத் நேற்று தொடங்கி வைத்தார். ராணுவத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றிய வீரர்களுக்கு இங்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். 5 மாதங்கள் அளிக்கப் படும் இப்பயிற்சியில் 200 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

விழாவில் பேசிய பிபின் ராவத், ‘‘இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் எதிர்காலத்தில் ராணுவத்தின் தலைசிறந்த தலைவர்களாக உருவாக வேண்டும். அவர்கள் வீரர்களின் தேவைகளை புரிந்துகொள்ள வேண்டும். தலைவர்கள் எப்போதும் இரக்க குணத்துடனும், கடினமான முடிவுகளை எடுக்கும்போது உறுதியுடனும் இருக்க வேண்டும். தலைவர்கள் உறுதியான நடவடிக்கைகளை தைரியத்துடன் எடுக்க வேண்டும். சவாலான நேரங்களில் முக்கிய முடிவுகளை தைரியத்துடன் எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் யுத்த களத்தில் சைபர் போர் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, அதை எதிர் கொள்ள அனைத்து மட்டத்திலும் தலைவர் கள் தகுதியுடன் இருக்க வேண்டும்’’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஒவ்வொரு நாட்டுக்கும் தனது எல்லைப் பகுதிகளை பாதுகாப்பது கடமையாகும். மேற்குப் பகுதியில் உள்ள அண்டை நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதம் பரப்பப்படுகிறது. குறிப்பாக, ஜம்மு - காஷ்மீருக்குள் அதிக அளவில் தீவிரவாதம் பரப்பப்படுகிறது. எனவே, தொழில்நுட்பம், உளவுத் துறை மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஷ்மீரில் ஊரடங்கு அமலில் உள்ள போது ஏற்படுத்தப்படும் வன்முறைகளை கையாளவும் அதிலிருந்து ராணுவ வீரர்களை பாதுகாக்கவும் எங்களுக்குத் தெரியும். இந்திய ராணுவத்தினரை தொட முடியாது என்பது பாகிஸ்தானுக்கும் தெரியும். அதனால்தான் அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

தீவிரவாதத்துக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை. ஆனால், இரண்டுக்கும் தொடர்பு உள்ளதுபோல தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. எல்லை விவகாரத்தில் சீனாவுடன் எந்தப் பிரச்சினை யும் இல்லை. இரு நாட்டு தலைவர் களின் முயற்சியால் அமைதியான சூழல் நிலவுகிறது. காஷ்மீரில் தீவிரவாதிகளுக் கும், அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் இடையேயான தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மக்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளை ராணுவம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

காஷ்மீரில் கடைகள் மூடப்பட்டிருப் பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த தீவிரவாதிகள் முயற்சிக்கின்றனர். காஷ் மீரில் கடந்த 2 மாதங்களாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப் படுகிறது. அவ்வாறு இருந்தால் காஷ்மீர் மக்களுக்கு எப்படி இத்தனை நாட்களுக்கு உணவு கிடைக்கும். காஷ்மீரில் உள்ள வீடுகளில் அடுப்பு எரிகிறது. ஜீலம் ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது. ஆப்பிள் பழங் கள் பறிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படு கின்றன. விமானங்கள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன.

பாலக்கோட்டில் தீவிரவாத முகாம் களை இந்திய ராணுவம் அழித்தது. ஆனால், இந்த முகாம்கள் மீண்டும் செயல் படத் தொடங்கியுள்ளன. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து 500 தீவிரவாதி கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ தயா ராக உள்ளனர். அதை முறியடிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள் ளது. இதற்காக, எல்லைப் பகுதியில் அதிக அளவு படைகள் நிறுத்தப் பட்டுள்ளன.

இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய தலைவர் சஞ்சீவ் கனல், தலைமை பயிற்சி அதிகாரி ஏ.அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x