Published : 23 Sep 2019 09:29 AM
Last Updated : 23 Sep 2019 09:29 AM

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா 29-ம் தேதி தொடக்கம்: தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன

இரா.வினோத்

பெங்களூரு

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா வரும் 29-ம் தேதி தொடங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசும், மைசூரு மாநகராட்சி யும் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன.

விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் போரில் வென்றதை கொண்டாடும் வகையில் கிபி 1610-ம் ஆண்டில் தசரா விழா தொடங்கப்பட்டது. பின்னர் மைசூருவை ஆண்டுவந்த உடையார் மன்னர்களால் நவராத்திரி விழா காலத்தில் தசரா விழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பிறகு, கடந்த 1972-ம் ஆண்டு முதல் கர்நாடக அரசின் சார்பில் மைசூரு தசரா மாநில விழாவாக பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக 409- வது ஆண்டு தசரா விழா வரும் 29-ம் தேதி தொடங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தொடக்க நாளான 29-ம் தேதி எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா மைசூரு மன்னர் குடும்பத்தின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து, தசரா விழாவை தொடங்கி வைக்கிறார்.

இதனால் தசரா திருவிழா நடைபெறும் 10 நாட்களும் மைசூருவில் இளைஞர் தசரா, விளையாட்டு தசரா, மகளிர் தசரா, குழந்தைகள் தசரா, உணவு தசரா, சினிமா தசரா என வண்ண மயமான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு தசராவை பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து தொடங்கி வைக்கிறார். சினிமா தசராவின் மூலமாக சர்வதேச திரைப்பட விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தசராவையொட்டி மைசூரு மாநகரில் உள்ள அரண்மனை, ஆட்சியர் அலுவலகம், பாரம்பரிய கட்டிடங்களை சுத்தப்படுத்தி, அழகூட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அரண்மனையில் உள்ள தர்பார் மண்டபத்தில் தங்கத்தால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து இளவரசர் யதுவீர் தர்பார் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

தசரா திருவிழாவின் இறுதி நாளான ஜம்போ சவாரி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக அர்ஜுனா, ஜனார்த்தனா உள்ளிட்ட 14 யானைகள் மைசூரு நகர வீதிகளில் ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதே போல பன்னி மண்டபத்தில் நடைபெறும் தீப்பந்த விளை யாட்டுக்கான ஒத்திகையும் நடை பெற்று வருகிறது.

தசரா விழாவில் கர்நாடக கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் இந்த ஆண்டு தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இதற்காக தமிழகக் கலைஞர்கள் பறையாட்டம், புலி ஆட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்டவற்றுக்கான ஒத்திகையை தொடங்கியுள்ளனர். இதேபோல மைசூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழர் பாரம்பரிய உணவு விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x